சினிமா

'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்

'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்

"கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன்" என கந்தர்வ குரலெடுத்து பாடினால் உங்கள் வீட்டின் பூஜை அறையில் கலைவாணி வந்து அமர்ந்திருக்கலாம். "என் இனியப் பொன் நிலாவே" என காதல் குரலில் அவர் ரீங்கரித்தால் சென்னை வெயிலும் ஊட்டியாகும் மனமெங்கும். "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்று பாடினால் இருக்கும் தாயையை நினைத்து விண்ணுலகம் சென்ற தாயையும் நினைத்து நம் கண்களின் ஓரம் நீரும் கசியும். "தண்ணித் தொட்டி தேடி வந்த கண்ணுக் குட்டி நான்" பாடலில் போதை தலைக்கேறிய குத்து டான்ஸ்க்கும் டஃப் கொடுப்பார் தாஸ். அப்படிப்பட்ட ராக தேவனாக நம்மோடு இருந்து தொடர்ந்து இசைப் பணியை செய்து கொண்டு இருக்கும் கே.ஜே.யேசுதாஸ்க்கு இன்று 79 ஆவது பிறந்தநாள்.

இவரது முழுப்பெயர் ‘கட்டசேரி யோசஃப் யேசுதாஸ்’. ஜனவரி 10, 1940 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் கொச்சினில் பிறந்தார். இவரது பெற்றோர் அகஸ்டைன் யோசஃப், அலைஸ்குட்டி. யேசுதாஸின் 1960 இல் கல்பாடுகள் என்னும் மலையாளத் திரைப்படம்தான் இவருடைய திரையிசைப் பயணத்தின் முதல்படி. 1964 இல் எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த ‘பொம்மை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடல், தமிழில் இவரது முதல்பாடல். அதன் பின் யேுசுதாஸுக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காளம் என யேசுதாஸ் பாடாத இந்திய மொழிகள் குறைவு.

கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கர்நாடக இசை மீது தீராத காதல் கொண்டவராக இருந்தார் யேசுதாஸ். அதுதான் ஆண்டுதோறும் சென்னையில் நடக்கும் மார்கழி கர்நாடக இசை விழாவில் யேசுதாஸ் தவறாமல் பங்கேற்று பாடி வருகிறார். சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை ஏழு முறை பெற்றுள்ளார் யேசுதாஸ். மாநில அளவில், 45 முறைக்கும் மேல் சிறந்த பாடகர் விருதினைத் தட்டிச் சென்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், ஆகியவற்றை பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி. ரஜினி, கமல், அஜித், விஜய் என அவர் குரலில் ஒலிக்காத நடிகர்களின் பாடல்களே கிடையாது.

அதேபோல எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், ஏன் இப்போதுள்ள அனிருத் வரைக்கும் அத்தனை இசையைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் கே.ஜே.யேசுதாஸ். 1965-ல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரஷ்ய அரசு இவரை அழைத்திருந்தது. இன்டர்நேஷனல் பார்லிமன்ட் ஃபார் சேஃப்டி அன்ட் பீஸ் அமைப்பின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971-ல், இந்திய - பாகிஸ்தான் போர் நடைபெற்றபோது, கேரளா முழுவதும் தன் இசைக் கச்சேரிகள் நடத்தி பிரதமர் யுத்த நிதிக்காக பணம் திரட்டினார்.1980-ல் திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும் தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை தொடங்கி நடத்தி வருகிறார்.

கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். ஒரு பாடகனாக வலம் வருவதற்கு அவரின் தான் காரணம் என்று கூறும் இவர், செம்பை வைத்தியநாத பாகவர், குமாரசாமி அய்யரையும் தனது குருவாக போற்றுகிறார்.

இத்தனை பெருமைகளையும், விருதுகளையும் பெற்றாலும் யோசுதாஸிடம் ஒரு முறை நீங்கள் பெற்ற மிகப் பெரிய விருதாகவும் அங்கீகரமாகவும் எதை நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, அதற்கு அவர் "சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு நாள் இரவும் சாத்தப்படும்போது, என்னுடைய குரலில் ஹரிவராசனம் பாடல் 1975 ஆம் ஆண்டு முதல் ஒலித்து வருகிறது. இதை விட வேறென்ன பெரிய விருதோ அங்கீகாரமும் எனக்கு வேண்டும்" என்றார் யேசுதாஸ். கேரளாவிலும், தமிழகத்திலும் யேசுதாஸின் குரல் ஒலிக்காத வீடே இல்லை என சொல்லலாம் ! இப்போது மட்டுமல்ல எப்போதும் யேசுதாஸின் குரல் சாகா வரம் பெற்றவை.