சினிமா

தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் ரிலீசுக்கு ரெடி - ‘தி லெஜண்ட்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளில் ரிலீசுக்கு ரெடி - ‘தி லெஜண்ட்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

சங்கீதா

லெஜண்ட் சரவணின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, மறைந்த விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’, ‘வாடி வாசல்’ ஆகிய இரண்டு பாடல்களும் யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி முன்னணி நடிகர்களின் பாடல்களுக்கு இணையாக அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வந்தநிலையில், காமராஜர் பிறந்த தினமான வருகிற ஜூலை 15-ம் தேதி வெளியாவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புதிய போஸ்டருடன் வருகிற ஜூலை 28-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைக் கோபுரம் ஃபிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வாங்கியுள்ளார். சுமார் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இதற்கு முன்பணமாக ரூ. 30 கோடியை தற்போதே அன்புச் செழியன் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிமுக நாயகனுக்கு இவ்வளவு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் கோலிவுட்டே வியப்பில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.