‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை தொலைபேசியில் அழைத்து நடிகர் சிம்பு சண்டைப்போட்டதாக ஒரு உரையாடல் வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைகேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த திரைப்படம் ‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’. கடந்த ஆண்டு வெளியான இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை குவிக்காமல், படுதோல்வி அடைந்தது. அத்துடன் சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன், சிம்பு படப்பிடிப்பில் முழுவதும் நடிக்கவில்லை என்று குற்றச்சாட்டை வைத்தார். 3ல் ஒரு பங்கு படப்பில் மட்டுமே சிம்பு நடித்ததாகவும், அதனால் தான் படம் தோல்வி அடைந்ததாகவும் கூறியிருந்தார். இதனால் தனக்கு 23 கோடி அளவிலான நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் 2ஆம் பாகத்தில் நடிப்பது குறித்து சிம்புவிடம் கேட்க சென்றால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும், அவரது தந்தை டி.ராஜேந்திரனை தொடர்பு கொண்டால் அவரும் சரியான பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சிம்புவும், ஆதிக் ரவிச்சந்திரனும் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஆடியோ 23 நிமிடம் இருப்பதாகவும், அதில் ஆக்ரோஷமாக பேசும் சிம்பு ஆதிக் ரவிச்சந்திரனை மிரட்டும் தொனில் பேசுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்தாய் என்று சிம்பு கொந்தளித்தாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆடியோ சிம்பு மற்றும் ஆதிக் இடையிலான உரையாடல் தானா என்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அவர்களின் குரலோடு ஒத்துப்போவதாக அதில் கூறப்படுகிறது.