2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ஒன்றை 'உறியடி' இயக்குனர் இயக்குகிறார்.
நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் 2D என்டெர்டெயின்மென்ட். இந்நிறுவனம் ‘36 வயதினிலே‘, ‘பசங்க-2’, ‘24’, ‘மகளிர்மட்டு’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்களை இதுவரை வெளியிட்டுள்ளது. வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களை மட்டுமே குறி வைத்து எடுக்காமல் கதையம்சம் உள்ள படங்களை எடுப்பதையே இந்நிறுவனம் குறிக்கோளாக கொண்டு இயங்கி வருவதாக சூர்யா தெரிவித்திருந்தார். அதன் அடுத்த கட்டமாக 'உறியடி' பட இயக்குனர் விஜய்குமாரை வைத்து இந்த நிறுவனம் புதிய படத்தை தயாரிக்க உள்ளது . ‘உறியடி’ படம் மூலம் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இவர். ஆகவே அவரது அடுத்த படைப்பு குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘உறியடி’ படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் நாயகனாக விஜய்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் சுதாகர். 'உறியடி'யில் கவனம் ஈர்த்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்துவரும் '96' படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘உறியடி’ படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய கதையாக இப்படம் உருவாக உள்ளது. இன்று பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இப்படம் ‘உறியடி’யின் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா தெரிவித்துள்ளார்.