சினிமா

“வரலாற்றை மறைத்தால் விஸ்வரூபம் எடுப்போம்”.. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு எதிராக புகார்

“வரலாற்றை மறைத்தால் விஸ்வரூபம் எடுப்போம்”.. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு எதிராக புகார்

PT

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள நோட்டீசில், சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம், நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது எனவும், இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதை என்பதைப் படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்களுக்கு திரையிட்டு காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ‘பொன்னியின் செல்வம்’ படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது தங்களுக்கு தெரிய வேண்டுமென வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழ வம்சத்தை வைத்து படம் எடுக்கும் மணிரத்தினத்திற்கு தற்போது தாங்கள் விஸ்வாசமாக இருக்கும் நிலையில், வம்சத்தின் வரலாறு மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால் விஸ்வரூபம் எடுப்போம் எனவும் அந்த நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னம் தவிர படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் படத்தில் நடித்துள்ள விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.