சினிமா

இசைக்கு ஏது மொழி? ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாடகர்கள்!

இசைக்கு ஏது மொழி? ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாடகர்கள்!

webteam

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், லண்டனில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ’நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ், இந்தி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி லண்டன் தமிழர்களுக்காக நடத்தப்பட்டதால் அவர் தமிழில் பேசினார். தமிழ் பாடல்களையே அதிகம் பாடினார். இதனால் அதிருப்தி அடைந்த இந்தி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரகுமான் மீது வருத்தத்தைப் பதிவு செய்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறினர். இதுபற்றி பரபரப்பான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பாடகர்கள் மற்றும் பாடகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாடகி ஷாஷா திரிபாதி கூறும்போது, ‘அந்த நிகழ்ச்சியின் டைட்டிலே, ’நேற்று இன்று நாளை’தான். அது தமிழ் நிகழ்ச்சி. அங்கு தமிழ்ப் பாடல்கள்தான் அதிகம் பாடுவார்கள் என்பது தெரியாதா? அதுமட்டுமின்றி, இசைக்கு மொழி ஒரு பிரச்னையில்லை. ஏ.ஆர்.ரகுமான் சீன மொழியில் பாடினாலும் நான் ரசிப்பேன்’ என்றார்.

பாடகர் ஸ்ரீனீவாஸ் கூறும்போது, ‘ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு இந்தி பாடல்களை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அவர் அந்த எல்லைகளை கடந்தவர். எந்த மொழியாக இருந்தாலும் இசைக்கு மரியாதை கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்தி பாடகர் சோனு நிகாம் கூறும்போது, ‘எனக்கு தமிழ் தெரியாது. ஆனாலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும்போது ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். இதே போலதான், யேசுதாஸ் பாடும்போதும். ரகுமானை குறை சொல்லும் ரசிகர்கள், அறியாமையால் பேசுகிறார்கள்’ என்றார்.