சினிமா

‘மலை’ படத்தில் யோகிபாபு, லக்ஷ்மி மேனனின் கதாபாத்திரங்கள் என்ன? - வைரலாகும் புகைப்படங்கள்

‘மலை’ படத்தில் யோகிபாபு, லக்ஷ்மி மேனனின் கதாபாத்திரங்கள் என்ன? - வைரலாகும் புகைப்படங்கள்

சங்கீதா

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடிக்கும், புதிய படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சீனு ராமசாமி, சுசீந்திரன் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ஐ.பி.முருகேஷ். இவர், தற்போது புதியப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், சிங்கம் புலி, ‘அறம்’  புகழ் ராமசந்திரன், காளி வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர். லக்ஷ்மி மேனன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘மலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை, லெமன் லீஃப் கிரியேஷன் முதல் முறையாக தயாரிக்கிறது.

70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தப் படம் குறித்து அறிமுக இயக்குநர் முருகேஷ் கூறுகையில், “தேனி குரங்கணி மலைப் பகுதியில் வாழும் நிஜ சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு, இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. மலைப் பகுதியைச் சேர்ந்த கதை என்பதால், இந்தப் படத்திற்கு ‘மலை’ என்று பெயரிட்டுள்ளேன். இந்தப் படத்தில் மலையும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இயற்கை மற்றும் மனிநேயம் பற்றி இந்தப் படம் பேசுவதாக இருக்கும்.

சில நிகழ்வுகள் நம்மையும், இயற்கையையும் எப்படி பாதிக்கிறது என்றும், இங்கு வாழும் பூர்வ குடிமக்களின் வாழ்க்கை, எவ்வாறு இந்த மலையோடு பிணைந்துள்ளது என்பதையும் காட்டும். லக்ஷ்மி மேனன் இந்தப் படத்தில், நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்து பணிபுரியும் இளம் மருத்துவராக நடித்துள்ளார். கிராமத்திற்கு வரும் லக்ஷ்மி மேனன், போலியான மருத்துவரை சந்திக்கும்போது, அவரால் படும் துன்பங்கள், அதனால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், சுவாரஸ்யங்களை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் யோகி பாபுவிற்கு லக்ஷ்மி மேனன் ஜோடியாக நடிக்கவில்லை. எனினும், அவர்கள் இருவரும் சேர்ந்து தோன்றும் காட்சிகளில், கெமிஸ்டரி நன்றாக இருக்கும். யோகிபாபு நகைச்சுவை நடிகராக இருந்தாலும், நல்ல நடிகர். அதனால் இந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். திருடனாக, நகைச்சுவையாளராக, உணர்வுப்பூர்வமானவராக என பல நடிப்பு திறமைகளை இந்தப் படத்தில் யோகிபாபு வெளிப்படுத்தியிருப்பார்.

‘கர்ணன்’, ‘மண்டேலா’ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். காளி வெங்கட் முதல் முறையாக இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். உள்ளூரில் வாழும் பேராசைக்காரனாக அவர் நடித்துள்ளார். இந்த மலைப் பகுதியில் வாழும் 100 பேர், இந்தப் படத்தில் நடித்துள்ளனர். யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.