சினிமா

விஜய் சேதுபதியின் ’லாபம்’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்!

விஜய் சேதுபதியின் ’லாபம்’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்!

sharpana

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ’லாபம்’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால், இப்படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை’ படத்தில் இணைந்த எஸ்.பி ஜனநாதன், விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் லாபம் படத்தில் இணைந்தனர். சமீபத்தில்தான் இப்படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலரில் விவசாயம் செய்யும் விஜய் சேதுபதியும், விவசாயம் சார்ந்த தொடர் வசனங்களும் இடம்பெற்று வரவேற்பை குவித்தது.

‘தொழிற்சாலை இயங்குனாதான் விவசாயமும் மக்களும் வாழமுடியும் என்று நம்ப வைத்துவிட்டார்கள். ஆனால், விவசாயம் பண்ணா மட்டும்தான் தொழிற்சாலை இயங்க முடியும். அதுதான் உண்மை’ என்று விஜய் சேதுபதி விவசாயத்தை பெருமைப்படுத்தி பேசும் வசனம் பாராட்டுக்களைக் குவித்தது. கடந்த வாரம்தான் லாபம் படக்குழு கிருஷ்ணகிரியில் படப்பிடிப்பை முடித்தது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று விவசாய மசோதாக்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராடிவரும் நிலையில், படத்தை உடனடியாக வெளியிட விஜய் சேதுபதி முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.ஏனென்றால், இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் கொரோனா சூழலால் தியேட்டர்கள் திறக்காமல் இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி ஓடிடி தளமான ஜி பிளக்ஸில் வெளியாகி வெற்றியும் பெற்றது. அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

தற்போது, அவரின் லாபம் படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட் ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதனால், படம் தியேட்டரில் வெளியாகிவிட்டு பின்பு ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, தேசிய விருது பெற்ற 'காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் ‘கடைசி விவசாயி’ படத்திலும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.