இந்தியா சார்பாக ‘ஆஸ்கர்’ விருதுக்கு போட்டியிடும் ‘கூழாங்கல்’ படத்தை இயக்குநர் வசந்தபாலன் பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக தயாரித்துள்ளது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி. தற்போது, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ’கூழாங்கல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா துறையினர் பலரும் ‘கூழாங்கல்’ திரைப்படக்குழுவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், சேரன், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் உள்ளிட்டோர் பாராட்டிய நிலையில், இயக்குநர் வசந்தபாலன் “உண்மையான தமிழ் கிராமத்தின் மணத்தோடு உருவாக்கப்பட்ட இயல்பான திரைப்படம் கூழாங்கல். இயக்குநர் வினோத்ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, தனது நண்பர்களுக்கு போன் செய்து படம் பார்த்துவிட்டேன். நிச்சயம் ஆஸ்காரை வெல்ல தகுதியான படம் என்று வசந்தபாலன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக, ‘கூழாங்கல்’ நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது. உக்ரைனில் நடந்த ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் தேர்வானது.