சினிமா

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசர்கள்!

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசை அரசர்கள்!

webteam

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும், அவரின் மகன் ஏ.ஆர் அமீனும் ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். 

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இன்று தனது 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறை, நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசையமைத்துள்ள ரஹ்மானுக்கு உலகளவில் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் திரைத்துறையில் தனது 25 ஆண்டுகளை ரஹ்மான் நிறைவு செய்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் இன்று வரை தனது ரசிகர்களை இசை மூலம் வசீகரித்து வருகிறார். ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கியது இந்தியாவை மேலும் பெருமை அடையச் செய்தது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு அவரின் மகனின் வருகைக்கு பின்னர் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. காரணம், ரஹ்மானின் பிறந்த தேதியும் அவரின் செல்ல மகனான ஏ.ஆர் அமீனின் பிறந்த தேதியும் ஒரே நாள். அமீன் ஜனவரி 6 ஆம் தேதி 2003 ஆம் ஆண்டில் பிறந்துள்ளார். எனவே, ஒவ்வொரு வருடமும் அமீன் தனது தந்தையுடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.  சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் சேர்த்து பிறந்த நாள் வாழ்த்துகள், வீடியோக்கள், புகைப்படங்களை அவரது இசை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சென்ற வருடம் வெளியான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் ஏ.ஆர்.அமீன் முதன்முதலில் பாடிய இந்திப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.