சினிமா

மீம்ஸ்களின் ராஜா : நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..!

மீம்ஸ்களின் ராஜா : நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று..!

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டலில் உலகில் ஒரு செய்தியை மக்களிடம் எளிமையாகவும், அழுத்தமாகவும் சொல்ல பரவலாக பயன்படுத்துவது மீம்ஸ் தான். அண்மைய காலமாக தமிழ் மீம்ஸ்களுக்கு தேவைப்படும் கண்டென்ட்டுகளுக்கு காட்டுத்தனமாக தீனி போட்டு வருகிறது நடிகர் வடிவேலுவின் காமெடி வசனங்களும், காட்சிகளும். 

காமெடியன், சப்போர்டிங், கதாநாயகன் என எந்த ரோலை கொடுத்தாலும் அதில் கனகச்சிதமாக பொருந்துபவர். அவருக்கு இன்று பிறந்தநாள். 

இதே நாளில் மதுரையில் கடந்த 1960இல் பிறந்தவர். எளிமையான குடும்ப பின்புலத்தை சேர்ந்தவர். 

நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்தமையால் நண்பர்களோடு இணைந்து சிறு சிறு வேடங்களை போட்டு நாடகங்களில் நடித்துள்ளார். அனுபவத்தை கல்வியாக கொண்டவர்.

‘என் தங்கை கல்யாணி’ தான் வடிவேலு நடித்த முதல்படம். 

நடிகர் ராஜ்கிரணின் அறிமுகத்தால் நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் புக் செய்யப்பட்டார்.தொடர்ந்து காமெடி ஜோடியான கவுண்டமணி - செந்திலோடு இணைந்து நடித்தவர் பின்னர் சோலோ காமெடியனாக உருவெடுத்தார். தேவர்மகன் படத்தில் இசக்கி என்ற கதாப்பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். 

ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தோன்றியிருப்பார் வடிவேலு. பிறகு பாரதி கண்ணம்மா, பிரெண்ட்ஸ், வெற்றி கொடி கட்டு, வின்னர், தலைநகரம், மருதமலை மாதிரியான படங்கள் வடிவேலுவின் காமெடிக்காகவே ஹிட் அடித்த படங்கள் எனவும் சொல்லலாம். 

தமிழ் சினிமாவில் ஹாரர் காமெடியை கொண்டு வந்த சிறப்பும் வடிவேலுவையே சேரும். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

எளிமையான உடல் மொழியில் வழக்கறிஞர், கவுன்சிலர், போலீஸ் என பலவிதமான கேரக்டர்களில் அசால்ட்டாக நடித்து பலரை சிரிக்க வைக்கும் கலைஞர். 

அவரது சினிமா வசனங்களை அன்றாட  வாழ்வில் பலரும் பேசுவதுண்டு. குறிப்பாக அடைமொழி கொண்ட பெயரின் கதாப்பாத்திரங்களில் அவரது நடிப்பு என்றென்றும் ரசிகர்களின் மனதில் குடியிருக்கும். 

2017இல் வெளியான மெர்சல் படத்திலும் தனக்கு கொடுத்த ரோலில் சூப்பராக நடித்திருப்பார். 

1980 துவங்கி 1990 வரை தமிழ் சினிமாவில் கவுண்டமணி - செந்தில் ஆண்ட காமெடி ராஜ்ஜியத்தை அதற்கு பிறகு ஆட்சி செய்தவர் வடிவேலு. இதுவரை  சுமார்  200க்கும்  மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.