சினிமா

ஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா? - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு

webteam

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும்‌ நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ர‌னாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் திரைத்துறையினர் முன் கலந்துரையாடிய மோடி, நிகழ்ச்சியின் முடிவில் தண்டியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மோடி, திரையுலக பிரபலங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி அப்சனா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான குஷ்பு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, பிரதமரை சந்தித்த அனைத்து இந்திய கலைஞர்களையும் மதிப்பதாகவும், அதேசமயம் ஹிந்தி சினிமா மட்டும் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவில்லை என்பதை பிரதமர் மோடிக்கு நினைவுகூர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய சினிமா பெரும் பங்கு வகிப்பதாகவும், அத்துடன் உலக அளவிற்கு தேசத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிறந்த திறமையாளர்கள், பெரும் சூப்பர் ஸ்டார்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவரும் தென்னிந்தியாவில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் ஏன் தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவில்லை ? என்றும் ஏன் இந்த பாகுபாடு ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.