பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், ராமச்சந்திரா ராஜூ நடிப்பில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப்.’ முதல் பாகம், அதுவரை கன்னட சினிமா உலகத்தின் மீது இருந்த பிம்பத்தை தகர்ந்தெறிந்தது. இதையடுத்து, ‘கே.ஜி.எஃப்.’ இரண்டாம் பாகத்திற்காக, ரசகிர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுவந்தநிலையில், கடைசியாக, உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கர்நாடகாவை தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ‘கே.ஜி.எஃப்.’ படத்தில் ரசிகர்கள் கிடைத்தார்கள்.
அதேபோல், ராக்கி பாய் கதாபாத்திரத்தில் பட்டயை கிளப்பிய நடிகர் யஷிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனால், இரண்டாம் பாகத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மிகப்பெரிய ஆக்ஷன் ட்ரீட்டாக ‘கே.ஜி.எஃப்.’ இரண்டாம் பாகம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாட துவங்கியுள்ளனர். தமிழகத்திலும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இயக்குநர் முக்கியமான தகவலை வைத்திருந்தார். அதாவது, படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகும் என்பதைத்தான் மறைமுகமாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் ராக்கி பாய் இறந்துவிடுகிறார். அவரது காதலியும் சுடப்பட்டு இறந்துவிடுகிறார். அப்புறம் எப்படி மூன்றாம் பாகம் எடுக்கமுடியும் என நினைத்தால், அதனை விளக்கவே டைட்டில் கார்டு முடிந்தப் பிறகு சில சீன்களை வைத்துள்ளார்கள். டைட்டில் கார்ட் போட்டவுடன் எழுந்து சென்றுவிட்டால் நிச்சயம் நாம் இந்த அப்டேட்டை தவறவிட்டுவிடுவோம்.
அதாவது, படத்தின் க்ளைமேக்ஸில் ராக்கி பாய் கப்பலை எடுத்துக் கொண்டு செல்லும் போது, இந்திய கப்பல் படையோடு அமெரிக்க மற்றும் இந்தோனேஷிய கப்பல் படைகளும் அவரை சுற்றி வளைக்கும். ஏனெனில், தங்கத்துடன் கடலுக்கு செல்லும் தனது திட்டம் குறித்து இந்திய அரசுக்கு மட்டுமல்லாது அமெரிக்க மற்றும் இந்தோனிஷிய அரசுக்கு, ராக்கி பாய் ஃபேக்ஸ் மூலம் தெரியப்படுத்தி இருப்பார்.
இவர், ஏன் அமெரிக்காவுக்கும், இந்தோனிஷியாவுக்கும் ஃபேக்ஸ் அனுப்பினார் என்ற கேள்வி நம்முள் வருகிறது. அதற்கு அடுத்த சீனிலேயே விடை கொடுக்கிறார். அமெரிக்காவின் சிஐஏ அதிகாரி ஒருவர், பிரதமர் ரமிகா ஷென்னிடம் ஒரு ரிப்போர்ட்டை கொடுப்பார். அமெரிக்காவில் ராக்கி பாய் நிறைய க்ரைம் செய்திருப்பதாகவும், அவரை தாங்கள் தேடி வருவதாகவும், அந்த சிஐஏ அதிகாரி ரமிகா ஷென்னிடம் கூறுவார்.
பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் தான் இரண்டு பாகங்களின் கதையும் கையாளப்பட்டுள்ளது. அதேபோல் தான் அவர் எழுதிய மூன்றாம் பாகத்தின் பிரதியை காட்சிப்படுத்துவதன் மூலம் படத்தை முடித்து இருக்கிறார்கள். அதனால், ரக்கி பாய் அமெரிக்காவில் செய்த க்ரைம்களை மையமாக கொண்டு மூன்றாம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளது. சில காட்சிகள் இந்தோனிஷியாவில் வந்து போகலாம். இதனால் ரசிகர்கள், ராக்கி பாயின் அடுத்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்த்து காத்திருப்பது, ‘கே.ஜி.எஃப். 3’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருவதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.