சினிமா

ஆயிரம் கோடி வசூலை கடந்தது கேஜிஎஃப்-2 ! இந்தியில் மட்டும் 350 கோடி வசூலை வாரிக் குவித்தது!

ஆயிரம் கோடி வசூலை கடந்தது கேஜிஎஃப்-2 ! இந்தியில் மட்டும் 350 கோடி வசூலை வாரிக் குவித்தது!

ச. முத்துகிருஷ்ணன்

உலகளவில் கேஜிஎஃப்-2 ரூ.1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதன் இந்தி பதிப்பும் ரூ.350 கோடி வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக ராக்கி பாய் கதாபாத்திரத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கன்னடா, இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் கே.ஜி.எஃப் -2 வெளியானது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் இருந்ததாக ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், இரண்டு வாரங்கள் தாண்டியும் நிறைய திரையரங்குகளில் கே.ஜி.எஃப்2 இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

“ராக்கி பாய்” ஆக யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த பிரஷாந்த் நீலின் “கேஜிஎஃப்: அத்தியாயம் 2” பாக்ஸ் ஆபிஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வசூல் சாதனைகள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் இருந்தன. சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம், உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தங்கல், ஆர்.ஆர்.ஆர் மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக ஆயிரம் கோடி வசூலை தாண்டும் நான்காவது இந்தியப் படமாக கேஜிஎஃப்-2 உருவெடுத்துள்ளது.

தங்கல் - ரூ. 2,024 கோடி)
பாகுபலி- 2 - ரூ. 1,810 கோடி
ஆர்ஆர்ஆர்  - ரூ. 1,100 கோடி
கேஜிஎஃப்-2 - ரூ.1000 கோடி*

கேஜிஎஃப்-2  இந்திப் பதிப்பு ரூ.350 கோடி வசூலை தாண்டி புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி மூன்றாவது வாரத்திலேயே மிக வேகமாக 350 கோடி வசூலைக் கடந்த திரைப்படமாக கேஜிஎஃப்-2 மாறியுள்ளது. முன்னதாக அதிவேகமாக இந்தியில் 350 கோடி வசூலைக் கடந்த படமாக பாகுபலி-2 இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திப் பதிப்பில் வசூல் சாதனைகளில் முக்கிய மைல்கல்லை எட்ட கேஜிஎஃப்-2 எடுத்துக் கொண்ட நாட்கள்:

ரூ.50 கோடி - முதல் நாள்
ரூ.100 கோடி - 2ஆம் நாள்
ரூ.150 கோடி - 4ஆம் நாள்
ரூ.200 கோடி - 5ஆம் நாள்
ரூ.250 கோடி - 7ஆம் நாள்
ரூ.300 கோடி - 11ஆம் நாள்
ரூ.350 கோடி - 15ஆம் நாள்

தமிழ்நாட்டிலும் கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழின் முன்னணி ஹீரோவான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் அந்த நேரத்தில் வெளியாகி இருந்த போது கே.ஜி.எஃப் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதிக அளவிலான திரையரங்களில் தமிழ்நாடு முழுவதும் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றது.