சினிமா

கள்ள நோட்டு புகாரில் பிரபல டிவி சீரியல் நடிகை குடும்பத்துடன் கைது

கள்ள நோட்டு புகாரில் பிரபல டிவி சீரியல் நடிகை குடும்பத்துடன் கைது

webteam

ரூ. 67 லட்சம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் கேரளாவின் பிரபல டிவி சீரியல் நடிகை கொல்லத்தில் கைது செய்யப்பட்டார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணக்கரையில் புதிய 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை மற்றும் அவரது தாயார், சகோதரி என மூவரை இடுக்கி மாவட்ட தனிப்படை போலீஸார் கொல்லத்தில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட நவீன இயந்திரம், 57 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கம் அதிகளவில் இருப்பதாக இடுக்கி மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இடுக்கி மாவட்ட எஸ்.பி., வேணுகோபால் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, இடுக்கி மாவட்டம் குமுளி அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முருகாசேரியை சேர்ந்த லியோடாம், கருநாகப்பள்ளிடை சேர்ந்த கிருஷ்ணகுமார், புற்றடியை சேர்ந்த ரவீந்திரன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் புதிய 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வண்டன்மேடு போலீசார் இந்த மூவரிடமும் நடத்திய விசாரணையில், இந்த நோட்டுகள் கொல்லத்தில் இருந்து வாங்கப்பட்டது எனவும், அசல் ரூபாய் மதிப்பிற்கு ஏற்ப இரண்டு மடங்கு கள்ள நோட்டு வழங்கும் கும்பல் குறித்து இந்த மூவரும் தனிப்படை போலீஸாருக்கு வாக்குமூலம் கொடுத்தனர்.

இதையடுத்து இடுக்கி மாவட்ட தனிப்படை போலீஸார் கொல்லம் விரைந்தனர். அங்கு பிரபல மலையாள டிவி சீரியல் நடிகையான சூர்யா வசித்து வரும் கொல்லம் பங்களாவை சோதனையிட்டனர். பங்களாவின் மாடியில் கள்ள நோட்டு அச்சடிக்கும் ஒரு தனிப்பிரிவே இயங்கி வந்ததை கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கள்ள நோட்டு அச்சடிக்கும் நவீன இயந்திரம், கட்டிங்க் இயந்திரம், விலை உயர்ந்த காகித சுருள் மற்றும் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விட தயாராய் இருந்த 67 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த வழக்கில் தொடர்புடையதாக கேரளாவின் பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை சூர்யா, கள்ள நோட்டு அச்சடிக்க உடைந்தையாக இருந்த நடிகையின் தாயார் ரமாதேவி, நடிகையின் தங்கை ஆர்யா ஆகிய மூவரையும் இடுக்கி மாவட்ட தனிப்படை போலீஸார் கைது செய்து இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அழைத்து வந்தனர், கைது செய்யப்பட்ட மூவரும் தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, கள்ள நோட்டுகளை கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் இருந்து வாங்கியோர், புழக்கத்தில் விட்டோர் குறித்த விபரங்களை அறிய, நடிகை உள்ளிட்ட மூவரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக இடுக்கி மாவட்ட எஸ்.பி., வேணுகோபால் தெரிவித்தார்.