சினிமா

கேரள நிவாரண முகாமில் ஹீரோயின்கள்!

webteam

கேரளாவில் நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்த மலையாள ஹீரோயின்கள் பாடல் பாடியும் நடனமாடியும் அவர்களை மகிழ்வித்தனர்.

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் தொடர்ந்து முகாமிலேயே இருக்கின்றனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அதில் தங்கியிருக்கிறார்கள்.

அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண உதவி களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர்களை உற்சாகப்படுத்த மலையாள ஹீரோயின்கள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் திட்டமிட்டனர். இதையடுத்து பத்தனம்திட்டாவில் உள்ள வல்லனா, கோழன்சேரி ஆடிட்டியோரியம், திருவில்லா அரசு பள்ளி ஆகிய முகாம்களுக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பாடல்கள் பாடி மகிழ்வித்தனர்.

அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர். இவர்களுடன் தர்ஷனா ராஜேந்திரன், ரோஷன் மாத்யூ, சிதார்த் சிவா ஆகியோரும் சென்றனர். இவர்களை அடுத்து நடிகை மஞ்சு வாரியர், பண்டலம் நிவாரண முகாமுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கையால் அங்கிருந்த அனைவருக்கும் உணவு பரிமாறினார்.

இதேபோல பின்னணி பாடகி சித்ரா கோழிக்கோடு நிஷாகந்தி என்ற இடத்தில் உள்ள முகாமுக்கு சென்று பாடல்களை பாடி, பாதிக்கப்பட்ட வர்களை மகிழ்வித்தார்.