சினிமா

இளம் சூப்பர் ஸ்டார்கள் எங்கே போனார்கள்? ஹீரோக்களை சாடிய அரசியல்வாதி நடிகர்!

webteam

கேரள மழை வெள்ளப்பாதிப்புக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இளம் ஹீரோக்கள் எதையும் வழங்கவில்லை என்று சாடினார், கேரள நடிகரும் எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார்.

கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். மழை குறைந்ததை தொடர்ந்து முகாமில் தங்கியி ருந்தவர்கள் வீடு திரும்பத் தொடங்கினர். ஆனால் வீடுகளை முழுமையாக இழந்தவர்கள் தொடர்ந்து முகாமிலேயே இருக்கின்றனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அதில் தங்கியிருக்கிறார்கள். அவர்களை அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய நடிகரும் எம்.எல்.ஏவுமான கணேஷ் குமார், சேனல் ஒன்றில் பேசிய போது இளம் மலையாள ஹீரோக்களை சாடினார். 

‘இந்த மழை வெள்ளம் கேரள மக்களை ஒன்றிணைத்திருக்கிறது. இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்காக நிவாரண உதவிகள் வழங் கப்பட்டு வருகின்றன. ஒரு படத்துக்கு 2 கோடி, மூன்று கோடி ரூபாய் கேட்கும் ஹீரோக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு எதுவும் செய்யவில்லை. அதிலும் குறிப்பாக இளம் ஹீரோக்களை சொல்கிறேன். வெறும் 5 நாள் கால்ஷீட்டுக்கு 35 லட்சம் ரூபாய் கேட்கும் காமெடி நடிகர்கள், கடை திறப்புக்கு 30 லட்சம் ரூபாய் கேட்கும் நடிகர்கள் எந்த உதவியையும் செய்யவில்லை. அவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்துவிட்டு மாயமாகிவிட்டார்கள்’ என்று குற்றம் சாட்டினார்.