சினிமா

“சாவித்ரிமா நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்” - கீர்த்தி சுரேஷ்

webteam

எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 66-ஆவது தேசிய திரை‌ப்பட விழாவில், நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தேசிய தி‌ரைப்பட விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு வழங்கினார். அதில் மறைந்த நடிகை‌ ‘சாவித்திரி’யின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் தயாரிக்கப்பட்‌ட ‘மகாநடி’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவரது பெற்றோர், சுரேஷ்குமார் மற்றும் மேனகா, சகோதரி ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு கீர்த்தி சுரேஷுக்கு உற்சாகம் அளித்தனர். விருது வாங்கியபோது அவரது தாய் மேனகா எழுந்து நின்று கைதட்டினார்.

இந்த விருது குறித்து நெகிழ்ச்சிப்பூர்வமான எழுத்துகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளார். அதில், “எனது உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனாலும் முற்படுகிறேன். இது ஒரு கனவு மட்டுமல்ல. ஒரு குறிக்கோள். அது என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. மறக்கமுடியாத இந்த பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.

நான் இந்த நிலைக்கு வருவதற்கு உந்து சக்தியாக இருந்த நடிகையான எனது அம்மாவுக்கும், இந்த கதாப்பாத்திரத்தை ஏற்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் இருந்தபோது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஊக்கமளித்த கோவிந்த் மாமாவுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்திற்கும் பின்னால் மூளையாக இருந்த இயக்குநருக்கும் நன்றி. சாவித்ரிமா, நீங்கள் எங்களைப் பார்த்து, எங்களை ஆசீர்வதித்தீர்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன். எனது குறிக்கோள் பட்டியல் இன்னும் நிறைய உள்ளது. அடுத்தடுத்து செல்ல வேண்டும். நன்றி வெங்கையா நாயுடு சார்” எனத் தெரிவித்துள்ளார்.