இந்தி திணிப்பை மையக்கருவாக கொண்டு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “ரகு தாத்தா”. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்திலும், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை திரைப்படம் என கூறப்பட்டாலும், படத்தில் முழுக்க முழுக்க இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பும், அதை எதிர்க்கும் வசனங்களும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளன. ஆகஸ்டு 15-ம் தேதி ரகுதாத்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ரகுதாத்தா திரைப்படம் வெளியாவதற்கு முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை வரலாம் என கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், “ரகு தாத்தா இந்தி திணிப்பு தொடர்பான படம், தமிழ்நாட்டில் மட்டும்தான் இதுபோன்ற படத்தைப் பற்றி பேச முடியும். இந்திக்கு எதிராக பேசிவிட்டு இந்தியில் நடிப்பதாக சிலர் விமர்சனம் செய்தனர். ஆனால் இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பு கூடாது என்பதே என் கருத்து” என்று பேசினார். மேலும் “அரசியலுக்கு வரும் ஆசை வருங்காலத்தில் வரலாம்” என்றும் கீர்த்தி சுரேஷ் கூறினார்.