சினிமா

உத்தராகண்டில் ’கேதார்நாத்’துக்கு தடை!

உத்தராகண்டில் ’கேதார்நாத்’துக்கு தடை!

webteam

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் கேதார்நாத் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலி அகான், நிதிஷ் பரத்வாஜ் உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம், 'கேதார்நாத்'. அபிஷேக் கபூர் இயக்கியுள்ள இந்தப் படம், 2013 ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளப் பாதிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், ’முத்தக் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. இந்து -முஸ்லிம் காதலை மையப்படுத்தி படம் எடுக்கப் பட்டுள்ளது. இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப் பது போல இருக்கிறது. காதல்தான் புனிதப் பயணம் என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது, இந்து மதத்தையும் அம்மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகத் தெரியும் கேதார்நாத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. அதனால் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும். மீறி வெளியிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்’ என்று இந்து அமைப்புகள் கூறிவந்தன.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சர்வதேச இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் பிரகாஷ் ராஜ்புத் என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், இந்த படம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அதிக முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்றும் அதனால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்கு குஜராத் நீதிமன்றம் மறுத்து, வழக்குத் தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்தது. மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து படம் நேற்று ரிலீஸ் ஆனது. 

ஆனால் உத்தராகண்ட் மாநிலத்தில் படத்தை திரையிட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அந்த மாநிலத்தின், டேராடூன், ஹரித்துவார், நைனிடால், அல்மோரா உட்பட ஏழு மாவட்டங்களில், கேதர்நாத் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.