’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து புகழ் பெற்ற சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து உயிரிழந்தையடுத்து, ’முல்லை கேரக்டரை ரீப்ளேஸ் செய்யப்போவது யார்?’ என்ற கேள்வி, அவரது ரசிகர்கள் மனதில் எழுந்தது. இந்நிலையில், சித்ரா நடித்த ‘முல்லை’ கேரக்டரில் ’பாரதி கண்ணம்மா’ புகழ் காவ்யா தற்போது ரீப்ளேஸ் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், ’சித்ராவைத் தவிர முல்லையாக வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று கருத்திட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். இதுகுறித்து காவ்யாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது...
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வாய்ப்பு எப்படி வந்தது?
"புதிய புதிய கேரக்டர்களில் நடித்து ரிஸ்க் எடுக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். அப்படித்தான், முல்லை கேரக்டரையும் சவாலாக நினைத்து ஏற்றுக்கொண்டேன். ’பாரதி கண்ணம்மா’ சீரியலின் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கேரக்டரில் நடிக்க டெஸ்ட் ஷூட் இருக்கு. நீங்களும் போய்ட்டு வாங்க’ என்றார். அப்படி அவர் சொன்னவுடன் முதலில் பயந்தாலும் ‘சரி போய் பார்க்கலாம்’ என்று போனேன். டெஸ்ட் ஷூட்டில் சீன் நடித்துக்காட்டினேன். ஆனால், ரிசல்ட்டை உடனே சொல்லவில்லை. மூன்று நாள்கள் கழித்து போன் செய்து ’நீங்க நாளையில் இருந்து ஷூட்டிங் வரணும்’ என்றுக் கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இது பெரிய வாய்ப்பு என்பதால் ’பாரதி கண்ணம்மா’ இயக்குநர் உட்பட மொத்த டீமும் நண்பர்களும் குடும்பத்தினரும் ’மிஸ் பண்ணாதே நல்லா பண்ணு’ என்று ஊக்கப்படுத்தினார்கள். மிகவும் சந்தோஷப்பட்டார்கள். பாரதி கண்ணம்மாவில் எனக்கு முதன்மை கேரக்டர் கிடையாது. என்னுடைய சிறப்பான நடிப்பை வழங்கியதற்கு பலரும் பாராட்டி வருகிறார்கள். அதுபோலவே, முல்லை கேரக்டரிலும் சிறப்பான நடிப்பை வழங்குவேன். பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு சீரியலில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. இது இல்லையென்றால், கண்டிப்பாக அந்த சீரியலில்தான் நடித்திருப்பேன்.
சித்ரா முகச்சாயலில் இருப்பதால்தான் உங்களை தேர்வு செய்தார்களா?
"அப்படியெல்லாம் இல்லவே இல்லை. ’முல்லை’ கேரக்டர் போல தலைசீவி புடவைக் கட்டினால் எல்லா பெண்களும் பார்க்க அப்படித்தான் இருப்பார்கள். சித்ராவுக்கும் எனக்கும் வட்ட முகம்தான். அதனால், வேண்டுமென்றால் அப்படி இருக்கும். எனக்கு நயன்தாரா ரொம்ப பிடிக்கும். அவங்க மாதிரிதான் வீடியோ போடுவேன். ஆனால், எல்லோரும் நான் சித்ரா மாதிரி பண்ணுகிறேன் என்று நினைக்கிறார்கள். என்னுடைய ஸ்டைலிலேயே நடிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இதனை சித்ரவின் தீவிரமான ரசிகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். என்னோட அறிவு கேரக்டரை மாற்றினால் கண்டிப்பாக யாரும் ஒத்துக்கமாட்டார்கள். அதுபோல்தான் சித்ரா நடித்த முல்லை கேரக்டரும். ரசிகர்களின் வருத்தம் எனக்கு புரியுது. போகப்போக என்னையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கதையை என்னிடம் சொல்லிவிட்டார்கள். நடிகை என்பதால் எப்படி நடிக்கவேண்டும் என்பது தெரியும். இன்னொருவரை பார்க்கவேண்டும்; அவரை ரெஃபரன்ஸ் எடுக்கவேண்டும் என்பதெல்லாம் எனக்கு இல்லை. பாண்டியன் ஸ்டோர் இயக்குநர் சிவா சாரும் ’உங்களோட ஸ்டைலிலேயே பண்ணுங்க’ என்றுதான் ஊக்கப்படுத்தினார்."
சித்ரா நடித்த ‘முல்லை’ கேரக்டரில் நடிப்பது எப்படி இருக்கிறது?
"எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதில் எப்படி சிறப்பாக நடிக்கவேண்டும், எப்படி இம்ப்ரூவ் பண்ணனும் என்றுதான் பார்ப்பேன். ’முல்லை’ எல்லோருக்கும், ஏற்கெனவே அறிமுகமான கேரக்டர். அதனை என் பக்கமிருந்து எப்படி சிறப்பாக பண்ண வேண்டும் என்றுதான் யோசிப்பேன். ஆனால், பலரும் நான் சித்ராவை பார்த்துதான் நடிக்கிறேன் என்கிறார்கள். உண்மை என்னவென்றால் நான் இதுவரை பாண்டியன் ஸ்டோர் சீரியலை பார்த்ததே இல்லை. முல்லை கேரக்டர் வாய்ப்பு வந்தபிறகும்கூட சித்ரா எபிசோட்டை பார்த்ததில்லை. முல்லையாக நடித்த பிறகும் இப்போதுவரை பார்க்கவில்லை.”
உங்களைப் பற்றி...
”எனக்கு சொந்த ஊர் ஆம்பூர். பள்ளி படிப்பையெல்லாம் அங்குதான் முடித்தேன். வகுப்பில் நன்கு படிக்கும் மாணவி. ப்ளஸ் டூ-வில் 1101 மார்க் எடுத்தேன். அதன்பிறகு, சென்னையில் மீனாட்சி கல்லூரியில் ஆர்கிடெக்சர் சேர்ந்தேன். முதல் வருடம் படிக்கும்வரை நடிக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஏற்பட்டதில்லை. எங்கள் குடும்பம் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம். எந்த சினிமா பின்னணியும் கிடையாது. நான் இரண்டாம் வருடம் படிக்கும்போதுதான் தெரிந்த தம்பிகள் மூலம் குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகுதான், நிறைய வீடியோக்கள் செய்தேன். பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துவிட்டேன். அதைப் பார்த்துவிட்டுதான் இயக்குநர் பிரவீன் பென்னட் சாரிடமிருந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வாய்ப்பு வந்தது. சீரியலில் மிகப்பெரிய இயக்குநரான, அவர் இயக்கத்தில் நடிக்காமல் இருக்க முடியுமா? ஓகே சொல்லி நடிக்க வந்துவிட்டேன். ’பாரதி கண்ணம்மா’ தான் எனது முதல் சீரியல். காலேஜ் போய்க்கிட்டே ஷூட்டிங்கும் வந்து போனேன்.”
’முல்லை தவிர எங்களால் யாரையும் கற்பனை பண்ண முடியாது’ என்று சித்ரா ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்?
”அந்த கமெண்ட்டுகள் முன்பைவிட தற்போது குறைந்திருக்கிறது. இப்போது எல்லாம் பாசிட்டிவாக மாறிவிட்டது. ’காவ்யா நல்லா பண்ணுறாங்க’ என்கிறார்கள். சித்ரா ரசிகர்கள் என்னை முல்லையாகத்தான் பார்க்கவேண்டும். சித்ராவாக பார்க்கக்கூடாது. நான் முல்லையைத்தான் ரீப்ளேஸ் பண்ணி நடிக்கிறேன். சித்ராவை ரீப்ளேஸ் பண்ணவில்லை. சித்ராவை யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. அதேபோல, காவ்யாவையும் யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். சித்ராவை சுத்தமாக எனக்கு தெரியாது. எப்போவாவது அங்க போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வெளிவரும். அதைப் பார்த்திருக்கேனே தவிர, அவங்க பேஜ் கூட ஓபன் பண்ணி பார்த்தது கிடையாது. அவங்க எப்படி பேசுவாங்கன்னும் தெரியாது. என்னிடம் சித்ரா நம்பரும் இல்லை. இதுவரை நான் பேசியதும் இல்லை. ஒரே ஒருமுறை அவார்ட் பங்ஷனில் தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ்தான் டிஆர்பி காம்பிடேஷனில் எப்போதும் இருக்கும். அப்போது, எல்லோரும் சித்ரா பற்றி பேசுவார்கள். நான் கேள்விப்பட்டவரை சித்ரா ரொம்ப நல்ல கேரக்டர், தன்னம்பிக்கையானவர் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த, இரண்டு சீரியல்களிலும் நான் இருக்கிறேன் என்பது ரொம்ப சந்தோஷம்.”
அடுத்து என்ன?
”சினிமாதான். என்னோட கனவு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான். இந்த வருடம் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.”
- வினி சர்பனா