பாலிவுட்டில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள செய்தியை, நடிகை கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர்களான விக்கி கொளஷால் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் காதலித்து வந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி ராஜஸ்தானில் மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு, முதன்முறையாக கத்ரீனா கைப், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு, கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.
‘ஏஜெண்ட் வினோத்’, ‘பத்லாபூர்’ மற்றும் ‘அந்தாதுன்’ ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பை, கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்தாவது, “புதிய தொடக்கம். ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’க்காக இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளேன். நான் எப்போதும் ஸ்ரீராம் சாருடன் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டுள்ளேன். படத்தின் கதையை திரில்லர் உடன் வர்ணிப்பதில் அவர் ஒரு மாஸ்டர். அவர் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பது பெருமை.
ரமேஷ் தௌராணி மற்றும் சஞ்சய் ரவுத்ரே தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கூட்டணி சேர்வதில் அதிக ஆர்வத்துடன் உள்ளேன்” இவ்வாறு கூறியிருந்தார். அதன்பிறகு இந்தப் படம் குறித்த தகவல்கள் வரவில்லை. இந்நிலையில், கத்ரீனா கைஃப் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
த்ரில்லராக உருவாகும் இந்தப் படம் புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ரமேஷ் தௌராணியின் டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸையொட்டி, வருகிற டிசம்பர் 23-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.