சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆன ‘ஜிகர்தாண்டா’ செப்டம்பர் 6 ரிலீஸ்

webteam

‘வால்மீகி’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகி வரும் ‘ஜிகர்தாண்டா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான வெற்றித் திரைப்படம் ஜிகர்தண்டா. தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

தமிழ்நாட்டிலுள்ள மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திரைக்கு வந்தது. பாபி சிம்ஹா நடித்த, "அசால்ட் சேது" என்ற கதாபாத்திரம் அவருக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. மேலும் இப்படத்தின் தொகுப்பாளர் விவேக் ஹர்சனுக்கும் தேசிய விருது கிடைத்தது. 

இந்நிலையில், தற்போது ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக ‘வால்மீகி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இயக்குகிறார். இதில், சித்தார்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே மற்றும் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி ‘வால்மீகி'  படம் திரைக்கு வர உள்ளது.