விவசாயம் மீது 'அக்கறை'யும், தெலுங்கு மசாலா சினிமா மீது ஈடுபாடும் ஒருசேர சிறப்பு விருந்து படைக்க முயன்றிருக்கிறான் 'சுல்தான்'. இதோ விரைவு விமர்சனம்...
சென்னையில் பெரும் தாதாவாக இருக்கிறார் நெப்போலியன். அவருக்கு மகனாகப் பிறக்கும் கார்த்தியை, அவரிடம் அடியாட்களாக வேலை செய்யும் 100 பேர் வளர்க்கின்றனர். ஓர் ஆபத்தால் அவர்கள் அனைவரையும் காக்க வேண்டிய பொறுப்பு, சுல்தானிடம்.
கொஞ்சம் பொறுங்கள். இதுமட்டுமல்ல கதைக்களம். சேலத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரும்பு தாதுவை எடுக்க ஒரு பெரும் முதலாளி திட்டமிடுகிறார். அதற்காக அந்தக் கிராமத்தை விவசாயத்திற்கு உதவாது என்று கட்டமைக்கத் திட்டமிடுகிறார். அந்தத் திட்டத்துக்காக தன்னுடைய அடியாட்களை அனுப்பி அங்குள்ள மக்களை கொன்று அச்சுறுத்துகிறார். இதனால் பாதிக்கப்படும் கிராம மக்கள், தாதா நெப்போலியனின் உதவியை கேட்கின்றனர். அவர்களுக்கு நெப்போலியன் செய்து கொடுக்கும் சத்தியத்தையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு ஆளாகிறார் கார்த்தி. இப்படி தன்முன்னுள்ள சவால்களை 'சுல்தான்' கார்த்தி எப்படி எதிர்கொள்கிறார் என்பதை திரைக்கதையாக வடித்திருக்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
நடிகர் கார்த்தி எப்போதும் போலவே, தான் எடுத்துக்கொண்ட வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். பல திரைப்படங்களில் அடியாட்களாக, துணை நடிகர்களாக வந்த சண்டைப் பயிற்சி கலைஞர்கள் இந்தத் திரைப்படத்தில் படம் முழுவதும் கார்த்தியுடன் வருகின்றனர். அந்தக் கூட்டத்தில் ஒருவராக வரும் யோகி பாபு சில இடங்களில் தன்னுடைய 'கவுன்ட்டர்' வசனங்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல் நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு காட்சிகள் குறைவு. இடைவேளை வரை சண்டை இல்லாமல் நகரும் 'சுல்தான்', இடைவேளைக்குப் பிறகு பல அதிரடிக் காட்சிகளை கொண்டுள்ளது.
படத்தின் நாயகன் கார்த்திக்குக்கு தமிழைத் தாண்டி தெலுங்கிலும் பெரும் மார்க்கெட் உள்ளது. அதை கவனத்தில் கொண்டு இந்த திரைப்படத்தை உருவாக்கி உள்ளனர். அதிரடி தெலுங்கு திரைப்படத்தில் இருக்கக் கூடிய பல்வேறு 'விஷயங்கள்' இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவு கிராமத்தையும், சண்டைக் காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளது. அதேபோல் இந்த திரைப்படத்தின் பாடல்களை உருவாக்க விவேக் - மெர்வின் ஆகியோர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இவர்களைத் தாண்டி யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது. பல மொழி படங்களில் இடம்பெற்ற சில காட்சிகளையும் வசனங்களையும் படத்தில் தவிர்த்திருக்கலாம்.
'நான் லாஜிக் எதிர்பார்க்க மாட்டேன், எதையும் எதிர்பார்க்காமல் இரண்டரை மணி நேரம் பொழுதைக் கழித்தால் போதும்' என்று நினைப்பவர்களின் நேரத்தை 'சுல்தான்' நிச்சயம் வீணாக்காது.
- செந்தில்ராஜா.இரா