சினிமா

குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்

குறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்

webteam

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சூட்டப்பட்ட பெயரும், நெஞ்சு நிமிர்த்திய அவர்களின் பார்வையும் கூட அதிகார வர்க்கத்தின் வன்மத்தை அதிகரிக்கச் செய்து, அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை நிகழ்த்தவைக்கும் என்பதை காட்சிக்குக் காட்சி பதிவு செய்தபடி வாள் தூக்கி நிற்கிறான் 'கர்ணன்'.

திருநெல்வேலி அருகே பொடியன்குளம் எனும் கிராமம்தான் கர்ணனின் களம். தங்கள் ஊரில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்பதற்காக மொத்த கிராமும் அலையாய் அலைய, பக்கத்து ஊர் ஆதிக்க சாதியினரால் தடைமேல் தடை வந்துகொண்டே இருக்கிறது. பிறகு அதுவே, கர்ணன் ஏந்தும் வாளில் ரத்தம் உறைவதற்கும் காரணமாய் அமைகிறது என்பதை உண்மைக் கலவரங்களின் பின்னணியிலேயே திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

1997-களின் பின்னணியில் 'கர்ணன்' படத்திற்கான களத்தை அமைத்திருக்கும் அவர், மீன்வெட்டு திருவிழா உள்பட அந்த மண்ணின் நிகழ்வுகளை படமாக்கி ரசிக்கவும், கால் கட்டப்பட்ட கழுதை, தலை வெட்டப்பட்ட சாமி சிலை என படம் நெடுக வரும் குறியீடுகளால் ஆச்சர்யப்படவும் வைத்திருக்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்த பொடியன்குளம் மாந்தர்களுக்கு கர்ணன், ஏமராஜா, துரியோதனன், அபிமன்யு போன்ற பெயர்களும், எதிர்மறை குணம் கொண்ட காவல்துறை அதிகாரிக்கும் கண்ணாபிரான் என சூட்டியிருக்கும் பெயருமே சிந்திக்க வைக்கிறது.

கர்ணனாக வரும் தனுஷ் ஒட்டுமொத்த படத்தையும் தன் கையில் இருக்கும் வாள்போலவே சுமந்திருக்கிறார். கோபமும், இயலாமையும் கலந்த அவர் பார்வையே வியக்க வைக்கிறது. நடிகர் லாலும் ஏமராஜா கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ரஜிஷா, லட்சுமி பிரியா போன்றவர்களோடு அந்த மண்ணின் மனிதர்களே கதாபாத்திரங்களாக வருவதால் படத்தின் நம்பகத்தன்மை கூடுகிறது.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம். படத்தின் வேகம் குறையாக தெரிந்தாலும், காட்சிகளின் வீரியத்தால் ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒற்றைக் காட்சியைப் போலவே, ஒரு நத்தை தன்னுயிரைக் காத்துக்கொள்ள தன் ஓடுகளை எப்படி ஆயுதமாக ஏந்துமோ, அந்த ரௌத்திரத்தை, நியாயத்தை நத்தையின் பக்கமிருந்தே உரையாடலாக முன்வைக்கும் வைக்கிறது 'கர்ணன்'. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்புகளில் தவறாமல் இந்தப் படம் இடம்பிடிக்கும்.

- ச.பொன்மனச் செல்வன்