சினிமா

'இது வழக்கமான காதல் கதை அல்ல...' - 5 வருடங்களுக்கு பிறகு இயக்குநராக திரும்பும் கரண் ஜோஹர்

'இது வழக்கமான காதல் கதை அல்ல...' - 5 வருடங்களுக்கு பிறகு இயக்குநராக திரும்பும் கரண் ஜோஹர்

நிவேதா ஜெகராஜா

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான கரண் ஜோஹர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

'குச் குச் ஹோதா ஹை', `கபி குஷி கபி கம்', `கபி அல்விதா நா கெஹ்னா', `மை நேம் இஸ் கான்', `ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்', `பாம்பே டாக்கீஸ்', 'ஹே தில் ஹை முஷ்கில்' ஆகிய வெற்றிப் படங்களால் இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கரண் ஜோஹர். 2016-ல் கடைசியாக படம் இயக்கியவர், கடந்த சில வருடங்களாக படம் இயக்காமல் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய படங்களை தயாரிப்பது மற்றும் மற்ற மொழி திரைப்படங்களை வாங்கி வெளியிடுவது என இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று தனது புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ரன்வீர் சிங் - அலியா பட் ஆகிய இருவரையும் வைத்து 'ராக்கி அஹவர் ராணிகி பிரேம் கஹானி' என்ற தலைப்பில் படம் இயக்கப்போவதாக ட்விட்டரில் அறிவித்து இருக்கிறார். இன்று நடிகர் ரன்வீர் சிங்கின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக ட்விட்டரில் கரண் ஜோஹர், "மீண்டும் லென்ஸுக்கு பின்னால் இருந்து முன்னால் எனக்கு பிடித்த நபர்களை இயக்க இருப்பதில் மகிழ்ச்சி. 'ராக்கி அவௌர் ராணி கி பிரேம் கஹானி' என்ற தலைப்பில் இஷிதா மொய்த்ரா, ஷாஷாங்க் கைதன் & சுமித் ராய் ஆகியோர் எழுத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட்டை இயக்குகிறேன்.

ஆம், இதுவும் ஒரு காதல் கதை. ஆனால் இது ஒரு வழக்கமான காதல் கதை கிடையாது. ராக்கியும் ராணியும் உங்கள் வழக்கமான காதல் கதைகளை மறுவரையறை செய்யப் போகிறார்கள்! தர்மேந்திரா, ஜெயா பச்சன் மற்றும் ஷபனா ஆஸ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்" என்று தனது அறிவிப்பில் வெளிப்படுத்தினார்.

இதே அறிவிப்பை ரன்வீர் சிங்கும் வெளியிட்டு இருந்தார். முன்னதாக அலியா பட் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் சோயா அக்தரின் 'கல்லி பாய்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்தில் அவர்களுக்கு இடையேயான 'கெமிஸ்ட்ரி' ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் மீண்டும் இந்தப் படத்தில் இணையவிருக்கின்றனர்.