சினிமா

காந்தாரா படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடல் சர்ச்சை வழக்கு -கோழிக்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காந்தாரா படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடல் சர்ச்சை வழக்கு -கோழிக்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சங்கீதா

‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலை திரையரங்கு உள்பட அனைத்து தளங்களிலும் ஒலிபரப்ப கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், ஹோம்பாலே தயாரிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், கன்னடத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தத் திரைப்படம், இதுவரை 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலை விட அதிகளவில் ‘காந்தாரா’ படம் வசூலித்துள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், பிரபாஸ், சிம்பு, கங்கனா ரனாவத், கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர். அத்துடன் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் கூஸ் பம்ப் ஆக இருந்தது. தற்போது இந்தப் பாடல் தான் காப்புரிமை சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

‘96’, ‘ஹே சினாமிகா’, ‘கார்கி’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் இசையமைத்து வரும் கோவிந்த் வசந்தாவின் இசைக்குழு தான் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’. இவரும், இவரது நண்பர்களும் இணைந்து நடத்திவரும் இந்த இசைக்குழு, மலையாள மொழியில் தனிப் பாடல்களை இயற்றி வெளியிட்டும் வருகிறது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு ‘நவரசம்’ என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இந்தப் பாடலை பல லட்சம் பேர் பார்த்து ரசித்திருந்தனர்.

அந்தப் பாடலும், ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலும் ஒன்றாக இருப்பதாக படம் வெளியானப் போதே சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ எனக் குற்றம்சாட்டிய ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு, இரண்டு பாடலுக்கும் தவிர்க்க முடியாத நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்று தெரிவித்ததுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது.

அதில், “வராஹ ரூபம் பாடல் காப்புரிமைச் சட்டத்தை மீறி இயற்றப்பட்டிருக்கிறது. பாடல் திருட்டுக்கும், பாடலைத் தழுவி இயற்றப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்தப்பாடல் ‘நவரசம்’ பாடலின் காப்பி என்பதால் சட்டரீதியாக ‘காந்தாரா’ படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” எனக் கூறியிருந்தது. ஆனால் இதனை ‘காந்தாரா’ படக்குழு மறுத்திருந்தது. இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் ஒரே மாதிரியாக இருப்பதாக ‘காந்தாரா’ படக்குழு தெரிவித்ததை ஏற்க மறுத்த தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு சட்டரீதியாக வழக்கும் தொடர்ந்தது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய 'வராஹ ரூபம்' பாடலை திரையரங்குகளில் ஒலிபரப்புவதை நிறுத்துமாறு ‘காந்தாரா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியின்றி ‘காந்தாரா’ படத்தில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடலை அதன் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், Amazon, YouTube, Spotify, Wynk Music, Jiosavan போன்ற எந்தவொரு ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.