சினிமா

‘கொஞ்சம் காதல்... கொஞ்சம் ஜாலி...’ - கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைவிமர்சனம்...!

‘கொஞ்சம் காதல்... கொஞ்சம் ஜாலி...’ - கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைவிமர்சனம்...!

subramani

துல்கர் சல்மான். கவுதம் மேனன், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. ஓகே கண்மணிக்கு பிறகு துல்கர் சல்மான் தமிழ்த் திரையில் தோன்றும் படம் இது. தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

ஹை டெக் திருடர்களான துல்கரும், ரக்‌ஷனும் நெருங்கிய நண்பர்கள்., ஆன்லைன் மூலம் திருடுவது, உயர்தர கார்களை ஹேக் செய்து திருடுவது என தங்களின் பொறியியல் அறிவைக் கொண்டு பெரிய லெவலில் திருடி ஜாலியாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு அறிமுகமாகும் நாயகி ரிது வர்மாவும் நிரஞ்சனியும் இடைவேளையில் குடுக்கும் ஷாக் ட்விஸ்ட் தான் படத்தின் இரண்டாம் பாதியை கலகலப்பாக எடுத்துச் செல்கிறது.

தான் இயக்கும் படங்களில் லேசாக ஒன்றிரண்டு காட்சிகளில் தலைகாட்டும் கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முழு படத்திலும் வலம் வருகிறார். உண்மையில் தனது மேன்லி பர்பாமன்ஸ்களால் அப்ளாஸ் அள்ளுகிறார். இளமை துள்ளல் நிறைந்த கலகல சினிமாவுக்கு தகுந்தார் போல கலர் புல்லாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன். பாடல்வரிகள் மனதில் நின்ற அளவிற்கு இசை நம்மை தொடவில்லை.

இப்படியான ஹைடெக் திருட்டை அடிப்படையாகக் கொண்ட சினிமாக்களில் லாஜிக் மீறல்கள் இருக்கும் தான் என்பதால் அதனை நாம் பொருட்படுத்த வேண்டியது இல்லை. ஆனால், ஹைடெக் திருடர்களாக சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்கள் எப்போதும் ஏன் குடும்பம் இல்லாத அல்லது அநாதை ஆசிரமங்களில் வளர்ந்தவர்களாகவே காட்டுகிறார்கள் நம் இயக்குநர்கள் என்ற லாஜிக் தான் புரியவில்லை.

படத்திற்கான லொகேசன் தேர்வு அருமை. சென்னை, டெல்லி, கோவா என ஒரு ஜாலி டூர் போய் வந்த அனுபவத்தை இந்தப்படம் கொடுக்கிறது. ஆனால், சில இடங்களில் திரைக்கதையினை நகர்த்த காட்சிகள் கிடைக்காமல் திணறியிருக்கிறார் இயக்குனர். சில ட்விஸ்ட் காட்சிகளைத் தவிர சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவையை இழக்கிறது. கதையும் நாம் அடிக்கடி கேட்ட பார்த்த கதை தான் என்பதால் சோர்வே மிஞ்சுகிறது.

'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருக்கலாம்.