சினிமா

போதையின் பிடியில் தள்ளாடும் கன்னட திரையுலகம் ?

jagadeesh

திரை உலகம் போதையின் பிடியில் சிக்கியிருப்பது நாளுக்கு நாள் வெளியாகும் செய்திகள் மூலம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சஞ்சனா கல்ராணியின் கைது அடுத்தடுத்து யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வியையும் முன் வைத்திருக்கிறது.

பாலிவுட்டின் 90% சதவீத நட்சத்திரங்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் சொன்னபோது, பெரும்பாலானவர்கள் சந்தேகத்துடன் அதனை பார்த்தார்கள். ஆனால், அடுத்தடுத்து நிகழும் விசாரணைகளும், கைது நடவடிக்கைகளும் பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய சினிமா முழுக்கவே போதை கலாச்சாரம் பரவியிருப்பதை உணர முடிகிறது.

அந்தவகையில், சில தினங்களுக்கு முன் கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நடிகை சஞ்சனா கல்ராணியை கைது செய்திருக்கின்றனர். சஞ்சனா கன்னடம், தெலுங்கில் 45 படங்களில் நடித்திருக்கிறார். இவர், நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி.

சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் ராகுல் ஷெட்டியின் வாக்குமூலமே பிரதானம் என மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சொல்லப்படுகிறது. சஞ்சனாவும், ராகுலும் பெங்களூருவில் பல தனியார் பார்ட்டிகளை ஒருங்கிணைத்திருக்கின்றனர். அதோடு, கப்பல்களில் நடக்கும் வெளிநாட்டு பார்ட்டிகளிலும் பங்கேற்று போதை பொருள்களை பயன்படுத்தியிருப்பதோடு, சாண்டல்வுட்டின் பல நட்சத்திரங்களுக்கும் அதனை விநியோகித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

கன்னட திரையுலகின் 13 நட்சத்திரங்களுக்கு போதைப் பொருள் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி என 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால், அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது எனும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது சாண்டல்வுட்.