சினிமா

முன்னாள் மாநிலத் தலைவர் மீது விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புகார்!

முன்னாள் மாநிலத் தலைவர் மீது விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புகார்!

webteam

விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவர் ஜெயசீலன், இயக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் நீலாங்கரை காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காஞ்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஈசிஆர் சரவணன், நீலாங்கரை காவல் உதவி ஆணையர் விஷ்வேஸ்வரய்யாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஜெயசீலன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த ஜெயசீலன் இயக்கத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இயக்க நிர்வாகிகள் குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு இயக்கத்திற்கு குந்தகம் விளைவித்துள்ளார்.

மேலும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் முன்னாள் எம்எல்ஏ புஸ்ஸி.ஆனந்த் இயக்கத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், சாதி ரீதியாக செயல்பட்டு விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரை நீக்கிவிட்டு அவர் சாதியை சேர்ந்தவர்க்கு மாவட்ட தலைவர் பதவியை வழங்கியுள்ளதாக கூறி சாதி மோதல் ஏற்படும் வகையில் ஜெயசீலன் பேசி வருகிறார்.

விஜய் நடித்து பொங்கல் அன்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட் 100 ரூபாய் மட்டும்தான் என்றும் ஆனால் ரசிகர்களுக்கு 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு இயக்கத்தின் செயல்பாடுகளை செய்துவருவதாக பொய்யான தகவல்களை பரப்புகிறார்.

இயக்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பிவருவதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மிக மன உளைச்சலில் இருக்கின்றனர். பொய்யான தகவல்களை பரப்பிவரும் ஜெயசீலனை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.