சினிமா

பிராமண மகா சபைக்கு கங்கனா எதிர்ப்பு

பிராமண மகா சபைக்கு கங்கனா எதிர்ப்பு

webteam

ஜான்சி ராணி என்கிற ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாறு, ’மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற பெயரில் சினிமாவாகியுள்ளது. ராணி லட்சுமிபாய் பிறக்கும் போது வைக்கப்பட்ட பெயர், மணிகர்னிகா. அதனால் அதையே டைட்டிலாக வைத்துள்ளனர். 
இதை தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ் இயக்கியுள்ளார். இவர் தமிழில் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்த ’வானம்’ படத்தை இயக்கியவர். 

கங்கனா ரனவ்த், ஜான்சி ராணியாக நடிக்கிறார். மற்றும் சிஷூ சென்குப்தா, அதுல் குல்கர்னி, சோனு சூட் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.

இந்நிலையில் தீபிகாவின் ’பத்மாவத்’ படத்துக்கு கர்னிசேனா அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததை போல, இந்த படத்துக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த சர்வ் பிராமண மகாசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

ராணி லட்சுமிபாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில்  ராணிக்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரிட்டிஷ் ஏஜென்ட் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதாகக் காட்சி உள்ளது என்று இந்த மகாசபை குற்றம் சாட்டியுள்ளது. 

இதுதொடர்பாக கங்கனா ரனவ்த்திடம் கேட்டபோது, ‘லட்சுமிபாய் பற்றிய இப்படியொரு கற்பனையே தரம் தாழ்ந்த ஒன்று. நாங்கள் அப்படி நினைக்கவே இல்லை. படத்தில் அப்படியொரு காட்சியும் இல்லை. ஏன் இப்படியெல்லாம் தவறாகச் சித்திரிக்கிறார்களோ தெரியவில்லை. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளால் நாங்கள் மன வேதனையும் வருத்தமும் அடைந்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை எழுதியவர் ’பாகுபலி’க்கு எழுதிய விஜயேந்திர பிரசாத். அவர் தனது மகளுக்கு மணிகர்னிகா என்ற பெயரைதான் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் இவர்கள் கற்பனை செய்வது போல கதை எழுதுவாரா?’ என்று கோபமாக கூறினார்.

இந்நிலையில் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சர்வ் பிராமண மகாசபை தலைவர், ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கை நேற்று சந்தித்து, படத்தின் இயக்குனர் இப்படிப்பட்ட காட்சி இல்லை என்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் படத்துக்கு கதை எழுதியுள்ள விஜயேந்திர பிரசாத் கூறும்போது, ‘என் மகளுக்கு மணிகர்னிகாவின் பெயரை வைத்ததில் இருந்தே ராணி லட்சுமிபாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர் புகழைக் கெடுக்கும் விதமாக படத்தில் எந்தக் காட்சியும் இல்லை’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயினும், ராணி லட்சுமிபாயின் பெருமையையும் மரியாதையையும் உயர்த்தும் விதமாகவே இந்தப் படம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.