வாள் சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகை கங்கனா படுகாயம் அடைந்தார். அவர் நெற்றியில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இந்தி நடிகை கங்கனா ரனவ்த் இப்போது, ஜான்சிராணியின் வரலாற்றைச் சொல்லும் ’மனிகர்னிகா’ என்ற படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இதை இயக்குகிறார். இவர் தமிழில் வானம் படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்துக்காக, வாள் சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளை கங்கனா பெற்றார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. நேற்று வாள் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. ஹாலிவுட் சண்டை இயக்குனர் நிக் பாவெல் இக்காட்சியை இயக்கினார். உண்மையான வாளை காட்சிக்குப் பயன்படுத்தி இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கங்கனா நெற்றியை வாள் பதம் பார்த்தது. ரத்தம் கொட்டியதை அடுத்து அவர் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை தனியார் மருத்துமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அவர் நெற்றியில் 15 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருக்கிறார். இன்னும் இரண்டு வாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் கூறும்போது, ‘இந்தச் சண்டைக் காட்சி, பல முறை நடந்த பயிற்சிக்குப் பின்பே படமாக்கப்பட்டது. ஆனால், டைமிங் மிஸ்சானதால் நிஹார் வீசிய வாள் கங்கனாவின் நெற்றியில் பட்டு ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது. இதற்காக கங்கனாவை விட அதிகம் துடித்தவர் நிஹார்தான். அவ்வளவு வலியிலும் தைரியமாக இருந்த கங்கனா துணிச்சலுக்குரியவர்’ என்றார்.
இந்தச் சம்பவம் இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.