சினிமா

கங்கனா தயாரிப்பில் சினிமாவாகும் ராம ஜென்மபூமி கதை!

கங்கனா தயாரிப்பில் சினிமாவாகும் ராம ஜென்மபூமி கதை!

webteam

ராம ஜென்ம பூமி பின்னணியை கதையாகக் கொண்ட படத்தை நடிகை கங்கனா ரனவத் தயாரிக்கிறார். 

பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ’தாம் தூம்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ’தலைவி’ யில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சொந்தமாக படம் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது அந்தப் படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அயோத்தி பிரச்னையை மையப்படுத்திய ’அபராஜிதா அயோத்யா’ என்ற படத்தை அவர் தயாரிக்கிறார். இதன் கதையை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார்.

இதுபற்றி கங்கனா கூறும்போது, ‘’கடந்த நூறு வருடமாக எரியும் பிரச்னையாக இருந்து வந்த அயோத்தி விவகாரம் சமீபத்தில் வெளியான தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. ’அபராஜிதா அயோத்யா’ படத்தில், ஆன்மிக நம்பிக்கை இல்லாதவனாக இருக்கும் நாயகன் நம்பிக்கைக் கொண்டவனாக எப்படி மாறுகிறான் என்பதைச் சொல்கிறோம். எனது சொந்த வாழ்வையும் இந்தக் கதை பிரதிபலிப்பதால், எனது முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைத் தேர்வு செய்தேன்’ என்றார் கங்கனா.

மேலும் கூறும்போது, ‘ அயோத்தி விவகாரத்தில் நமது ஒற்றுமை, மதச்சார்பின்மை உணர்வை சீர்குலைக்க வாய்ப்பிருந்தும் நாம் தேச பக்தர்களாக இருந்தோம். நாட்டின் மீது விசுவாசம் கொண்டவர்களாக இருந்தோம். அதனால்தான் ’அபராஜிதா’ என்ற வார்த்தையை அயோத்தி என்ற டைட்டிலுக்கு முன் சேர்த்தோம். அதற்கு வெல்லப்பட முடியாதவன் என்று அர்த்தம்’’ என்றார் கங்கனா.