சினிமா

37 வருடத்துக்குப் பிறகு ’மீண்டும் கோகிலா’ : இயக்குனர் நெகிழ்ச்சி

37 வருடத்துக்குப் பிறகு ’மீண்டும் கோகிலா’ : இயக்குனர் நெகிழ்ச்சி

webteam

தான் இயக்கிய ’மீண்டும் கோகிலா’ படத்தை  37 வருடத்துக்குப் பின் ரசிகர்களுடன் பார்த்தது மகிழ்ச்சியளித்தது என்று அதன் இயக்குனர் ஜி.என். ரங்கராஜன் கூறினார்.

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா, தேங்காய் சீனிவாசன் நடித்து 1981-ல் ரிலீஸ் ஆன படம், ‘மீண்டும் கோகிலா’. அனந்து வசனம் எழுதிய இந்தப் படத்தை சாருசித்ரா பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இளையராஜா இசை அமைத்திருந்தார். ஜி.என்.ரங்கராஜன் இயக்கியிருந்த இந்தப் படம், 37 வருடத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது. 

இதை இயக்கியிருந்த ஜி.என்.ரங்கராஜன் சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் நேற்று ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சார்பிலும் தியேட்டர் நிர்வாகம் சார்பிலும் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

இதுபற்றி ரங்கராஜனின் மகனும் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களின் இயக்குனருமான ஜி.என்.ஆர்.குமரவேலனிடம் கேட்டபோது, ‘இத்தனை வருடத்துக்குப் பிறகு, தான் இயக்கிய படத்தை தியேட்டரில் பார்த்ததில் அப்பாவுக்கு மகிழ்ச்சி. இப்போதும் ரசிகர்கள் பல இடங்களில் கைதட்டியதைப் பார்த்த போது அவருக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. ஒரு கலைஞராக அவருக்கு இதை விட வேறு என்ன தேவை இருக்கிறது?’ என்றார்.