சினிமா

அஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராமசாமி: கமல்ஹாசன் பேச்சு!

அஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராமசாமி: கமல்ஹாசன் பேச்சு!

webteam

’வீரத்தின் உச்சகட்டம்தான், அஹிம்சை. அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியுள்ள படம், 'டிராபிக் ராமசாமி' . இதில், எஸ்.ஏ. சந்திரசேகரன் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி இயக்கியுள்ளார். பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு. க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த  கமல்ஹாசன், படம் பற்றி பேசியதாவது: 

அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகுக்கு உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப் பார்த்திருக்கிறோம். ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கர் பற்றியும் தெரியும். இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம் சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம். இவர்களால்தான் இந்தியச் சக்கரம் சுழல்வதாக நம்புகிறேன்.

(இயக்குனர விக்கியுடன் கமல்ஹாசன்)

மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர்தான் டிராஃபிக் ராமசாமி. அவர் எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். அப்படிப் பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும்படி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படக் குழுவுக்கு இதுவே முதல் வெற்றி. எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல்  படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது .

இந்தப் படத்தில் பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சியும் இந்த டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில் அடுத்த தலைமுறை ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை. அந்தப் பெயரும் உணர்வும் தான் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை. இப்படிப்பட்ட மனிதர்க ளின் வெற்றிதான் இந்தியாவின் வெற்றி. டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியா வின் வெற்றி இந்த மாதிரி சாமான்ய வீரர்களால்தான்.  மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம்தான், அஹிம்சை. அதற்கு உதாரணம் டிராபிக் ராமசாமி.
இவ்வாறு  கமல்ஹாசன் கூறியுள்ளார்.