சினிமா என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல எனவும் அது கலாச்சார தடயம் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தை ‘தூங்காவனம்’ திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார். இதில் நாசரின் மகன் அபிஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கடாரம் கொண்டான் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி எம்.ஆர்.சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன், விக்ரம், அக்ஷராஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “நல்ல சினிமாவையும், தமிழ் சினிமாவையும் உலக தரத்திற்கு கொண்டு போகும் முயற்சியிலேயே நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன்.
ஒரு அரசாங்கமே துரத்தும் அளவிற்கு நாங்கள் படம் எடுத்திருக்கிறோம். அதனால் இந்தப் படமும் தரமாக இருக்கும். சினிமா வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அது கலாச்சார தடயம்” எனத் தெரிவித்தார்.