சினிமா

இந்தியன்-2.. கமலின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமா?

இந்தியன்-2.. கமலின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமா?

rajakannan

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசம் குறித்து உறுதியான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமையிலான தமிழக அரசு குறித்து கமல் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஊழல் மலிந்துள்ளதாகவும், அகற்றப்பட வேண்டிய அளவிற்கு குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். அரசியல் குறித்து கமல் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அவர் அரசியல் இறங்குகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், அரசியல் பிரவேசம் குறித்து தெளிவான கருத்துக்களை கூறாமல் மறைமுகமாகவே பேசிவந்தார். 

இந்த நிலையில், அரசியல் நிச்சயம் இறங்க உள்ளதாகவும், அப்பட்டி இறங்கினால் தனிக்கட்சி தொடங்வதாகவும் கூறிய கமல், 100 நாட்களில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்று சமீபத்தில் தெரிவித்தார். இது அரசியல் இறங்கப் போவதை கிட்டதட்ட உறுதி செய்தது. கடைசியாக அளித்த பேட்டியில் அரசியலில் இறங்கிவிட்டால் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கமல் தெரிவித்தார். 

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் நடிக்க உள்ளதாக கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியன் -2 படத்தில் நடிக்கிறார் என்றால் அரசியல் பிரவேசம் தாமதமாகிறதா என்று அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. 

இந்த திரைப்படத்தின் மூலம் கமல் தனது அரசியலுக்கு அடித்தளம் அமைக்கத் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால், தனது அரசியல் பிரவேசத்தின் முக்கியமான கொள்கையாக லஞ்ச ஒழிப்பையே கமல் பிரதானமாக கூறி வருகிறார். இந்தியன் திரைப்படமும் முழுக்க லஞ்ச ஒழிப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். எனவே இந்தியன் 2ஐ கமல் தனது புதிய அரசியல் பிரவேசத்துக்கு ஏதோ ஒருவகையில் பயன்படுத்திக் கொள்வார் என்று கூறப்படுகிறது.