இந்தியன் 2 தான் என்னுடைய கடைசிப் படம் அத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடவுள்ளதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1996 இல் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் இந்தியன். ஊழல் செய்பவர்களை களையெடுக்கும் சுதந்திரப் போராட்ட வீரரின் வேடத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். இந்தக் கூட்டணி 22 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று கேரளாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் கொச்சி வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது " 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். இந்தியன் 2, படமே என் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம். அதன் பின்பு நடிப்புக்கு முழுக்கு. இந்தியன் 2வின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. நான் நடிப்புக்கு முழுக்குப்போட்டாலும், என்னுடைய படத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரிக்கும். மேலும் பல சமூக நலப் பணிகளையும் மேற்கொள்ளும்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த கமல்ஹாசன் "கேரளா எனது சொந்த வீடு போன்றது. பல நல்ல திட்டங்களை பிணராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற நல்ல திட்டங்களை தமிழக்ததிலும் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலன் என வரும்போது மதச்சார்பற்ற அணிகளுடன் இணைந்து செயல்பட தயாராகவே இருக்கிறேன்" என்றார் அவர்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக பதிலளித்த கமல்ஹாசன் " சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர அதனை திணிக்கக் கூடாது" என தெரிவித்தார்.