சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது ரசிகரின் நிலைமையைக் கண்டு கமல்ஹாசன் கண்கலங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான நேரமும் அண்மையில் மதியம் 1 மணி வரை எனக் குறைக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சினிமாவில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் போன்றவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக ஊடகமான ட்விட்டரில் ஒருவர் கமல்ஹாசன் சம்பந்தமான ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இடுப்புக்குக் கீழாகச் செயல்படாத ஒருவரின் வாழ்க்கை பதிவாகியுள்ளது. அதனை பாலாஜி என்பவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோவில் சில காட்சிகள் மனதைக் கசக்கும்படி உள்ளன. வீடியோவில் உள்ளவர் காணொளி காட்சி மூலம் நடிகர் கமல்ஹாசனிடம் பேசுகிறார். ஆனால் அந்த உரையாடலின் போது உடன் உள்ளவரால் பேச முடியவில்லை. அவர் என்ன நினைக்கிறாரோ அதை ஒருவர் கமலுக்கு விளக்கு சொல்கிறார். அதை அமைதியாகக் கமல் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தப் பதிவில், “30 வயதான இவர் பெயர், போகன் இவரால் பேச முடியாது. இயல்பாக நடக்கவும் முடியாது. ஆனால் இவர் உங்களின்(கமல்ஹாசன்) தீவிர ரசிகர். இவர் உங்களது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர். அந்த நிகழ்ச்சியை டேப்-இல் பார்த்து ரசிப்பார். அவர் உங்களைப் பார்த்தது பெரிய கனவு நிறைவேறி விட்டதாகச் சொல்கிறார். இந்தத் தருணத்தை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்கிறார்” என்று உரையாடல் போகிறது.
ஊரடங்கு நிலவி வரும் நேரத்தில் மக்கள் எந்தப் பக்கமும் போக முடியாமல் தவித்து வருகின்றனர். போகனைப் போன்றவர்கள் காணொளி காட்சி மூலமாக மகிழ்ச்சியடைந்து வருவதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் எபிசோட் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை மூன்று எபிசோட்டுகள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.