சினிமா

நடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்!

webteam

இந்தி நடிகர் ஷாருக் கானுக்கு எதிரான போராட்டத்தை ஒடிசாவின் கலிங்க சேனா அமைப்பி வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து இன்று நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழாவில் அவர் பங்கேற்கிறார். 

ஷாரூக் கான், கரீனா கபூர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ‘அசோகா’. இந்தப் படத்தில் அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் ஒடிசாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடந்ததால், அங்கு படம் திரையிடப்படவில்லை.

(ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்)

’அசோகா’ வெளியாகி 17 வருடம் ஆன நிலையில், இப்போது புது பிரச்னை கிளம்பி இருக்கிறது. அந்த படத்தில் கலிங்கப் போரை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் இதன் மூலம் ஒடிசா மக்களின் உணர்வுகளை பாதித்துவிட்டதாகவும் கலிங்க சேனா என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக இதன் தலைவர் ஹேமந்த ராத் கடந்த 1 ஆம் தேதி போலீசில் புகாரும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதை காண வருமாறு நடிகர் ஷாரூக் கானுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று அவர் இந்த விழாவில் பங்கேற்கிறார்.

’கலிங்க போரை தவறான கண்ணோட்டத்தில் சித்தரித்தற்காக, ஷாரூக் கான் மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லை என்றால் ஒடிசா அவரும் அவர் முகத்தில் மையை தெளிப்போம். அவர் வரும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டுவோம்’ என்று அந்த அமைப்பின் செயலாளர் நிஹார் பானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தும் அமைப்பினர், கலிங்க சேனா கட்சி நிர்வாகிகளுக்கு இமெயில் மூலம், போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஹாக்கி இந்தியாவின் தலைவர் முகமது முஸ்டாக் அகமது அனுப்பிய மெயிலில், ஷாரூக் கான் இந்திய அளவில் பிரபலமானவர். ஹாக்கி விளையாட்டை முன்னேற்றும் விதமாக, பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ’சக் தே இந்தியா’ படத்தில் நடித்தவர். ஹாக்கி வீரர்களுக்கு அவர் ஆதரவளிப்பவர் என்பது  பரவலாக அறியப்பட்ட ஒன்று. அவருக்கு எதிரான போராட்டத்தை ஹாக்கி போட்டியின் போது நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

அதோடு, ‘சர்வதேச போட்டி ஒன்று நம் மாநிலத்தில் நடக்கும்போது, இது போன்ற போரட்டம் நடத்தினால் அது மாநிலத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அமைப்பு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது.

இதுபற்றி கலிங்க சேனா அமைப்பின் தலைவர் ஹேமந்த் ராத் கூறும்போது, ‘ஹாக்கி இந்தியாவின் தலைவர் முகமது முஸ்டாக் அகமதும் மாநில அரசும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஷாரூக் கானுக்கு எதிரான எங்கள் போரட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து இன்று நடக்கும் தொடக்க விழாவில் ஷாரூக் கான் கலந்துகொள்கிறார். இவருடன் இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.