'பாரிஸ் பாரிஸ்' திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சி, படத்துக்கு தேவையான ஒன்று என்று அப்படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் தெரிவித்துள்ளார்
ஹிந்தியில் கங்கனா நடித்த ‘குயீன்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. இந்நிலையில் இப்படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் "பாரிஸ் பாரிஸ்", தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி", கன்னடத்தில் "பட்டர்ப்ளை", மலையாளத்தில் "ஜாம் ஜாம்" என்று படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்தப் படத்தை நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில் டீசரும் வெளியானது.
டீசர் அனைவரின் பாராட்டை பெற்றாலும் அதே அளவுக்கு சர்ச்சைக்குள்ளும் சிக்கியது. காஜல் அகர்வால் தனது தோழியுடன் வரும் ஒரு குறிப்பிட்ட காட்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதே காட்சி ஹிந்தியின் குயீன் படத்தில் இருந்தாலும் தமிழுக்கு அந்த காட்சி சரிவராது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய "பாரிஸ் பாரிஸ்" படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த், ''அந்தக்காட்சி அத்தனை ஆட்சேபணைக்குரியது அல்ல. அந்தக்காட்சி படத்தின் கதைக்கு தேவையான ஒன்று. படம் பார்க்கும் போது மக்கள் அதன் தேவையை உணர்வார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.