சினிமா

கைதி 2 வருவது உறுதி... ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

கைதி 2 வருவது உறுதி... ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

JananiGovindhan

மாநகரம் படத்தை இயக்கிய போதே அறிமுக இயக்குநராக அசத்தியிருந்த லோகேஷ் கனகராஜ், தனது கைதி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.

அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் படம் வசூல் ரீதியில் ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ், அவரை வைத்தே ‘விக்ரம்’ படத்தை கைதியின் சீக்வலாக இணைத்து இயக்கியிருந்தார். அதிலும் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறார் அவர்.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியான விக்ரம் படத்திலேயே அதன் அடுத்த பாகத்துக்கான குறீயிடுகளை வைத்து எடுத்திருந்தது, அவரது ரசிகர்களின் ஆர்வத்தை பெரிதளவில் தூண்டியிருக்கிறது. ஏற்கெனவே கைதி 2 எடுக்கப்படும் என இயக்குநர் லோகேஷ், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பிலும் கூறப்பட்டாலும் அது விக்ரம் ரிலீஸூக்கு பிறகு ஊர்ஜிதமாகியிருக்கிறது.

அண்மையில் லோகேஷ் அளித்த நேர்காணல் ஒன்றிலுலும் கைதி படத்தில் கார்த்தி ஜெயிலில் ஒரு ஃபுட்பால் ப்ளேயராக இருந்தார் எனக் கூறியிருந்தார். இந்த தகவல்தான் கைதி 2ல் கைதியின் ப்ரீக்வலாகவும், விக்ரமில் வந்த சூர்யாவின் ரோலக்ஸுக்கும், கைதி தில்லிக்கும் நேருக்கு நேர் களமாக இருக்கும் என கணிக்கப்பட்டு வருகிறது. தற்போது விக்ரம் பட வெற்றி பயணத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் லோகேஷ், அடுத்ததாக விஜய்யின் தளபதி 67ஐ இயக்கவிருக்கிறார். அதன் பிறகு கைதி 2 படம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான எஸ்.ஆர்.பிரபு ட்விட்டர் ஸ்பேஸில் அண்மையில் பேசிய போது , “கைதி 2, கைதி படத்தை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். விஜய் 67 முடிந்ததும் கைதி 2க்கான வேலைகளை லோகேஷ் தொடங்குவார்” என்றார். தொடர்ந்து தளபதி 67ல் கமல் கேமியோவில் நடிப்பதாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு “கதையில் தேவைக்கேற்ப லோகேஷும், கமலும் அதை முடிவெடுப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து அப்டேட்டாக வந்துக் கொண்டிருப்பதால், தளபதி 67 மற்றும் கைதி 2 மீது ரசிகர்கள் அனைவரும் அதீத எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும் மல்டிவெர்ஸ் கான்செப்ட் மூலம் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு இட்டுச்செல்லும் லோகேஷின் அடுத்த படைப்பு மீதான எதிர்ப்பார்ப்பும் ஹை லெவலில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.