சினிமா

“அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” - கபிலன் வைரமுத்து

webteam

ஆதாரமின்றி பொதுவெளியில் ஆண் மீதோ, பெண் மீதோ பழிசொல்லுவது அபாயகராமனது என கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் தெரிவித்துள்ளார். 

மீ டூ தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் மண்ணில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கங்கள் ஆண் - பெண் சரிசமமாக இயங்கும் குடும்ப அமைப்பை ஒரு முக்கியக் கனவாகக் கருதின. தற்போது மேல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள், அந்தக் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என அய்யம் எழுகிறது. எந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும், பெண் ஆணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது” என தெரிவித்துள்ளார். 

அத்துடன், “Metoo என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது அது எங்கே திசை மாறுகிறது என தீர்க்கமாகச் சொல்லும் பக்குவம் எனக்கில்லை. அப்பா எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது. பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள். தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.