சினிமா

’காலா’ ரஜினிக்கு ஒரு கம்பீர பாடல்!

webteam

‘காலா’ படத்தில் ரஜினிகாந்துக்காக ஒரு கம்பீரப் பாடலை எழுதியுள்ளேன் என்று பாடலாசிரியர் கபிலன் கூறினார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹூமா குரேஸி, நானா படேகர், அஞ்சலி படேல், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கும் படம், ‘காலா’. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். முரளி .ஜி ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. வரும் 1-ம் தேதி டீசர் வெளியாகிறது. இந்தப் படத்தில் ’கபாலி’யில் இடம்பெற்ற ’நெருப்புடா நெருங்குடா’ என்ற பாடல் போல ஆக்ரோஷ பாடல் ஒன்று இடம்பெறுகிறது. இதை பாடலாசிரியர் கபிலன் எழுதுகிறார். 

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ’பா.ரஞ்சித் என் நண்பர். சமீபத்தில் அவர் கானா பாடல்களுக்கு உலக அங்கிகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினார். கானா பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்தவன் நான். அதற்காக அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தேன். 


அவரது படங்களில் தொடர்ந்து பாடல் எழுதிவருகிறேன். ’அட்டகத்தி’ படத்தில் ’ஆசை ஒரு புல்வெளி’, ‘ஆடி போனா ஆவணி’ ஆகிய ஹிட் பாடல்களை எழுதினேன். ’மெட்ராஸ்’ படத்தில், ’ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா?’, ‘எங்க ஊரு மெட்ராஸூ’ ஆகிய பாடல்களையும் ’கபாலி’யில், ‘உலகம் ஒருவனுக்கா...’, ‘வானம் பார்த்தேன்’ பாடல்களையும் எழுதினேன். இப்போது ’காலா’ படத்துக்கும் அழைத்தார். ரஜினி நடித்த சில காட்சிகளைக் காண்பித்தார். அதற்கு ஏற்றவாறு நம்பிக்கையூட்டும் பாடல் ஒன்றைக் கேட்டார். இதற்காக எனது பழைய கவிதைகளை கேட்டு வாங்கினார் பா.ரஞ்சித். எழுதி கொடுத்திருக்கிறேன். இந்தப் பாடல் கண்டிப்பாகப் பேசப்படும் ஒன்றாக இருக்கும்’ என்றார்.