kaakkaa muttai to kottukali PT
சினிமா

காக்கா முட்டை முதல் கொட்டுக்காளி வரை.. கலைப்படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி!

ET desk

5 பாடல்கள்.. அதில் ஒரு ITEM SONG. 2 சண்டை காட்சி.. காதல், சென்டிமென்ட், காமெடி அடங்கியிருக்கும் வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கு கிடைக்கும் அமோக வரவேற்பும், எதிர்பார்ப்பும், நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான படங்களுக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த நிலை இப்போது மாறி வருவதை உணர்த்துகிறது, கொட்டுக்காளி.

சூரி, ANA BEN உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பி.எஸ்.வினோத் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள், சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கமர்ஷியல் சினிமா- உணர்வுப்பூர்வ சினிமா குறித்த இந்த கான்செப்டை, கொட்டுக்காளி படத்தில் இருந்து தொடங்குவதற்கு ஒரு காரணம் உண்டு.. சர்வதேச திரைப்பட விருது விழாக்களில் திரையிடப்பட்ட, சினிமா ஆளுமைகளின் கவனத்தை பெற்றுள்ளது, கொட்டுக்காளி. ஒரு பெரிய இயக்குநரின் படத்தை சர்வதேச திரைப்பட விருது விழாக்களுக்கு கொண்டு செல்வது, வழக்கமானது என்றே சொல்லலாம்.

ஆனால், கொடுக்காளியின் இயக்குநர் பி.எஸ்.வினோத்துக்கு இது 2ஆவது படம்தான். அவரின் முதல் படமான கூழாங்கல், நெதர்லாந்தின் ROTTERDEM விருது விழாவில் திரையிடப்பட்டது. COMMON ஆடியன்ஸை முழுமையாக சென்றடையாத அந்த படத்துக்கு, ROTTERDEM விருது விழா ஒரு அடையாளம் கொடுத்தது. அங்கு கிடைத்த வரவேற்புதான், கூழாங்கல்லை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இயக்குநர் பி.எஸ்.வினோத் அடிப்படையில் ஒரு நாடகக் கலைஞர்.. அங்கு கிடைத்த பயிற்சிதான் கூழாங்கல்போன்ற எதார்த்த படைப்புகளை உருவாக்க தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது.

நட்சத்திர நடிகர்கள் இல்லை. அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களோ, குழுவோ இல்லை. அந்த குறைகள் பெரிதாக தெரியாதவாறு கூழாங்கல் உருவாக்கப்பட்டிருக்கும். அதுதான் அதன் வெற்றியும் கூட. இந்த நிகழ்வுகளை எல்லாம் உற்றுநோக்கினால் ஒரு மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும்.

மக்களிடையே வரவேற்பு பெற்ற படங்களை விருது விழாக்களுக்கு கொண்டு சென்ற காலம்போய், விருதுகளுக்காகவே படம் எடுக்கும் காலம் உருவாகியிருக்கிறது. ஒரு படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர், அதை விரைவாக திரைக்கு கொண்டு வந்து லாபம் பார்க்கவே நினைப்பார்.

வர்த்தக ரீதியாகப் பார்த்தால் அது நியாயமானதுதான். ஏனென்றால், கலை என்ற வட்டத்தைக் கடந்து, சினிமா என்பது கோடிகள் புழங்கும் ஒரு சந்தை மட்டுமே. ஆனால், ஒரு சில கலைஞர்கள் மட்டுமே தங்களின் படத்துக்கான அங்கீகாரத்தைப் பெற, வெவ்வெறு முயற்சிகளை செய்கிறார்கள். அதில், பெரும்பாலானோர் நடிகர்களாகவும், இயக்குநர்களாவும் இருப்பதை கவனிக்க வேண்டி இருக்கிறது.

ஒரு பீட்சாதான்.. கவனம் பெற்ற காக்கா முட்டை

தமிழ் சினிமாவில் கொஞ்சம் பின்னோக்கி சென்றால், 2010ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ட்ரெண்ட் உருவானது எனலாம்.. அதில் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்தை குறிப்பிட வேண்டும். PIZZA சாப்பிட வேண்டுமென்னும் அண்ணன்- தம்பியின் ஆசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் காக்கா முட்டை. படத்தின் பெயருக்கும் கதைக்கும் தொடர்பே இருக்காது. ONE LINE - ஆக கேட்கும்போது மிகச் சாதாரணமாக தோன்றும் காக்கா முட்டை கதையை, திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார், மணிகண்டன்.

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், ஒரு கமர்ஷியல் படத்துக்கான எந்த ELEMENTS-உம், இந்த படத்தில் இருக்காது. இங்குதான், தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் - தனுஷின் மூளை வித்யாசமாக யோசித்தது. படத்தை முதலில் விருது விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதன்பின் வெளியிடலாம் என முடிவு செய்தனர். அதன் பலனாக ஏராளமான விருதுகளைக் குவித்தது காக்கா முட்டை திரைப்படம். இது படத்தின் மீது தனி கவனத்தையும் பெற்றுத் தந்தது. அதன்பின் திரையரங்கில் வெளியான காக்கா முட்டைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

உலகத்தின் கவனத்தை ஈர்த்த விசாரணை 

இவ்வரிசையில், வெற்றிமாறனின் விசாரணையையும் குறிப்பிட வேண்டும். சந்திரகுமார் எனும் ஆட்டோ ஓட்டுநர் எழுதிய LOCKUP நாவலை மையமாக வைத்து உருவானது, விசாரணை. அடையாளம் இல்லாத மனிதர்களுக்கு, அதிகார வர்க்கத்தால் நேரும் கொடுமைகளை பற்றி விவரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இதிலும், கமர்ஷியல் படத்துக்கான ELEMENTS எதுவும் இருக்காது. ஆனால், வெனிஸ் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில், விருதுகளைக் குவித்தது விசாரணை திரைப்படம். உலகமெங்கும் கிடைத்த விருதுகளும், அங்கீகாரமும், விசாரணைக்கு தனி கவனத்தை பெற்றுத் தந்தது. அந்த கவனம் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன்விளைவாக, காவல்துறை ஒடுக்குமுறைக்கு எதிராக, விசாரணை படம் எழுப்பிய கேள்விகள் மக்களை சென்றடைந்தது. அது சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

விருது விழா திரையிடல் என்பது சர்வதேச அங்கீகாரத்துக்கான முயற்சி என்றாலும், அதை ஒரு உத்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நல்ல படம் முக்கியமான மேடையில் பாராட்டப்படும்போதோ? சர்வேதச திரை கலைஞர்கள் அதை கொண்டாடும்போதோ? அது படத்துக்கான விளம்பரமாக மாறுகிறது. அதை வைத்து படத்துக்கான சந்தை மதிப்பை அதிகரிக்கும் நுட்பமான செயல்கள் கட்டமைக்கப்படுவதை புரிந்து கொள்ளலாம். வெற்றிமாறனின் விடுதலை 2, இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்கள் எல்லாம், திரையரங்க ரிலீஸுக்கு முன்னதாக, சர்வதேச விருது விழாக்களில் திரையிடப்பட்டு வருவதற்கு இதையும் ஒரு காரணமாகக் கூறலாம்.

நடிகர்கள், இயக்குநர்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் அத்தி பூத்தார்போல் சில தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென விரும்புகிறார்கள்.. இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை படத்தை சர்வதேச அங்கீகாரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதுகுறித்து புதிய தலைமுறையில் தகவல் பகிர்ந்து கொண்ட அவர், கமர்ஷியல் ELEMENTS இல்லை என்றாலும், அதன் உருவாக்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையே, படத்தை விருது விழாக்களுக்கு கொண்டு செல்லக் காரணம் என்றார். அதோடு, தமிழ் படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக்கூறினார்.

இப்பட்டியலில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனையும் குறிப்பிட வேண்டும்... காதலா காதலா. பம்மல் கே.சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற படங்கள் இவரின் தயாரிப்பில் உருவானதுதான்.. இவர் ராமின் இயக்கத்தில் பேரன்பு திரைப்படத்தை தயாரித்தார்... அதனை சர்வதேச விருது விழாக்களுக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தது.. கலையின் மிதான காதலோ? வர்த்தக நோக்கமோ? எதுவாக இருந்தாலும் ஒரு ஒரு நல்ல படத்துக்கு மக்கள் வரவேற்பு கிடைக்கும் நிலை உருவாகியிருப்பது, ஆரோக்கியாமானதாக பார்க்கப்படுகிறது.