சினிமா

ஒரு நேர்மையான முயற்சி! - 'காடன்' விரைவு விமர்சனம்

ஒரு நேர்மையான முயற்சி! - 'காடன்' விரைவு விமர்சனம்

webteam

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் 'காடன்' திரைப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க மலைப்பகுதியில் இந்தத் திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். 'வனப்பகுதியை அழித்து பெறக்கூடிய வளர்ச்சி அவசியமற்றது' என்ற கருத்தை முன்வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர். குறிப்பாக, அசாமின் காசியாபாத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் 'காடன்' உருவாக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் பேராசையால் தங்களுடைய வாழ்விடங்களை யானைகள் இழக்கின்றன. அதை மீட்க நினைக்கும் நாயகனின் வலி என்ன என்பதை ராணா அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இது, அவருக்கு முதல் நேரடி தமிழ்த் திரைப்படம். வனத்துக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை மிக அழகாக எடுத்துரைத்திருக்கிறார். மேலும், கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை உடல் மொழியிலும் வெளிப்படுத்தி கவர்கிறார் ராணா.

விஷ்ணு விஷால் இந்தத் திரைப்படத்தில் குறைந்த காட்சிகளே வந்தாலும், தனக்கான வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். அதேவேளையில், இரண்டு நாயகிகள் படத்தில் இருந்தாலும் அவர்களுக்கான காட்சிகள் குறைவே.

முழுக்க முழுக்க வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. காடுகளின் அழகுகளை மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஏ.ஆர்.அசோக்குமார். அதேபோல் ரெசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சிறப்பாக அமைந்துள்ளது.

'காடன்' திரைப்படத்தில் ஜனரஞ்சக விஷயங்கள் அனைத்தும் தவிர்த்துவிட்டு, சொல்ல நினைத்ததை மட்டும் காட்சிப்படுத்தியுள்ளார் பிரபு சாலமன். காடுகள் அழிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை எந்த ஒரு சமரசமும் இல்லாமல் நேர்மையாக சொல்ல வேண்டுமென்று முயற்சித்திருக்கிறார். ஆரம்பம் முதல் தோல்வி அடைந்து கொண்டிருக்கும் காடனின் போராட்டமும், இலக்கை நோக்கிய நகர்வும்தான் எல்லாம்.

காடுகளின் முக்கியத்துவத்தைச் சொல்ல முயற்சித்த இயக்குநர், திரைக்கதையில் சுவாரசியத்தை இன்னும் கூட்டியிருந்தால், மிகச் சிறப்பான அனுபவத்தை பார்வையாளர்களுக்குத் தந்திருப்பான் இந்தக் 'காடன்'.

காடன் - வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

- செந்தில்ராஜா.இரா