இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.
அவர் தொடுத்துள்ள மனுவில், “5ஜி இணைய சேவையை கொண்டு வருவதன் வாயிலாக தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். இதன் மூலம் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது மனிதர்களை பேராபத்திற்கு இட்டுச்செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில் மொபைல் போன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக தாவரங்கள் மற்றும் விலங்குகளின் டிஎன்ஏ, செல்களில் ஏற்படும் சேதம் எப்படி கேன்சர், சர்க்கரை வியாதி, இருதய நோய்களை உருவாக்குகின்றன என்பதற்கு உரிய சான்றுகள் சமர்பிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை ஜூஹி சாவ்லா கூறும்போது, “ நான் டெக்னாலாஜி மேம்பாட்டிற்கு எதிரானவள் அல்ல. ஆனால் கதிவீச்சுகள் அதிக தீங்கு விளைவிக்கும் என்பதற்கும் ஆரோக்கியம் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை இது கடுமையாக பாதிக்கும் என்பதற்கும் நம்மிடம் தகுந்த காரணம் உள்ளது” என்றார்.
நீதியரசர் ஹரிசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த வழக்குமீதான விசாரணை ஜூன் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.