சினிமா

ஆஸ்கரில் விருதுகளை குவிக்குமா "ஜோக்கர்" ?

ஆஸ்கரில் விருதுகளை குவிக்குமா "ஜோக்கர்" ?

jagadeesh

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜோக்கர் திரைப்படம், விருதுகள் பட்டியலிலும் முதலிடம் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

சாலையில் நடந்து செல்லும்போதும், பேருந்தில் பயணம் செய்யும்போதும், வேலை செய்யும் இடத்திலும் அவமானப்படுத்தப்படுகிறார் ஆர்தர் பிளெக். அவரைச் சுற்றி அவரே கட்டமைத்த, அல்லது பிறரால் கட்டமைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்புதான் ஜோக்கர் திரைப்படம்.

ஆர்தர் பிளெக்தான் அந்த ஜோக்கர். கோதம் நகரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கோமாளி வேடமிடும் வேலை அவருக்கு. பொருத்தமில்லாத நேரத்தில் பலமாகச் சிரிக்கும் மாறுபட்ட நோயுடன், மனப்பிறழ்ச்சியும் சேர்ந்து அவரை முற்றிலும் புறக்கணிப்படும் நபராக மாற்றிவிடுகிறது. பாதி கற்பனை, மீதி விரக்தியுடன் வாழும் அவருக்கு எல்லா இடங்களிலும் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே. அந்த ஏமாற்றமும் புறக்கணிப்பும் பெருகி கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி நிலைக்கு தள்ளப்படுகிறார் ஆர்தர். தான் ஒரு கோமாளியா அல்லது போராளியா என்று தெரியாமல் சுற்றித் திரிகிறார். இறுதியில் அவருக்கு புலப்பட்டு விடுகிறது. அதன் மூலமாக குரூரமான ஓர் உலகைக் காட்ட முற்படுகிறார் இயக்குநர் டாட் பிலிப்ஸ்.

ஆர்தர் பிளெக் பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோக்கைன் பீனிக்ஸ், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் படங்களுள் இதுவும் ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் தனது உடல்மொழியால் திரைப்படத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். கற்பனையான ஒரு நகரத்தையும், காலக்கட்டத்தையும் கொண்டுவந்திருக்கும் கலை இயக்குநரின் பெரும்முயற்சியும் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. ஆனால் பல விமர்சகர்கள், திரைப்படத்தின் கதையையும் காட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

வாழ்வில் விரக்தியடைந்தவர்கள் யாரையும் சுட்டுக் கொல்லலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் காட்சிகள் படத்தில் இருப்பதாக ஒருதரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். வன்முறை நடக்கும் என்பதால் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் ஆர் சான்று பெற்று அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது ஜோக்கர்.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 11 பிரிவுகளில் ஜோக்கர் திரைப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதில் பல பிரிவுகளில் விருது கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் நம்பிக்கையற்ற, சிதைந்துபோகும் போக்குக் கொண்ட ஒரு சமூகத்தை முன்னிறுத்தும் இந்தப் படத்துக்கு விருதுகளை வழங்கக் கூடாது என்ற கருத்தும் பொதுவெளியில் உலவுகிறது.