சினிமா

ஆஸ்கரை ஓரம் வைத்துவிட்டு காதலியுடன் பர்கர் சாப்பிட்ட ஜோக்கர் நாயகன் - வைரல் புகைப்படம்!

webteam

ஆஸ்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தன் காதலியுடன் பர்கர் சாப்பிட்ட ஜோக்கர் நாயகனின் புகைப்படம் வைரலாகி வருகிறது

நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகருக்கான விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஆக்கின் பீனிக்ஸ் பெற்றார். ஜோக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்த ஆக்கின் பீனிக்ஸ், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒவ்வொரு காட்சியிலும் தனது உடல்மொழியால் திரைப்படத்திற்கு உயிரூட்டியிருப்பார். சிரிப்பு, அழுகை, கோபம் என பல உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஜோக்கர் நாயகனுக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி சிறந்த நடிகருக்கான விருதை ஆக்கின் பீனிக்ஸ் பெற்றார்.

ஆக்கின் பீனிக்ஸ் ஆஸ்கர் வென்றதற்கு சினிமா ரசிகர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பீனிக்ஸுக்கு ஆஸ்கர் கிடைத்தது சரியான கெளரவம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஆஸ்கர் விருதை வாங்கியபோது மேடையில் பீனிக்ஸ் பேசிய பேச்சும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்கருக்கு பிறகான பீனிக்ஸின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தன் காதலியான ரோனா மாராவுடன், படிக்கட்டில் அமர்ந்திருக்கும் பீனிக்ஸ், தான் வாங்கிய ஆஸ்கரை ஓரமாக வைத்துவிட்டு பர்கரை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இருவரும் சிரித்தபடி இருக்கும் அந்த புகைப்படம் தற்போது பலராலும் பகிரப்படுகிறது. புகைப்படக் கலைஞர் ஒருவர் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.