தனது முன்னாள் மனைவியிடம், 50 மில்லியன் டாலர் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜானி டெப்!
’டெட் மேன்’, ஸ்லீப்பி ஹாலோவ், பிரம் ஹெல், சீக்ரெட் விண்டோ உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஜானி டெப். இவர், 2003 ஆம் ஆண்டு, ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: த கர்ஸ் ஆப் த பிளாக் பேர்ல்’ என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து, தொடர்ந்து ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படங்களின் பாகங்களில் நடிக்கத் தொடங்கினார். இது அவருக்குப் பிரபலமான இடத்தை அளித்தது.
அந்த படத்தில் இடம்பெறும் கேப்டன் ஜாக் ஸ்பாரோ கேரக்டரில் சிறப்பாக நடித்திருப்பார் ஜானி டெப். அவரின் வித்தியாசமான நக்கல் பேச்சு, செல்லச் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜாக் ஸ்பாரோ என்றாலே அது ஜானி டெப்தான் என்ற நிலை உருவானது. கடந்த 15 வருடங்களாக அந்த கேரக்டரில் நடித்து வந்த, 55 வயதான ஜானியை இனி அந்த கேரக்டரில் பார்க்க முடியாது. காரணம், அவரது முன்னாள் மனைவி!
ஜானியின், முதல் மனைவி லோரி அன்னி அல்லிசன். 1983 ஆம் ஆண்டு இவரை திருமணம் செய்த ஜானி டெப், இரண்டே வருடத்தில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த திருமணமும் இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்தது. 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
விவாகரத்துக்குப் பிறகு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், ஜானி தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும் அவரை பற்றி அவதூறாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார் அம்பெர் ஹெர்ட். இந்த புகார் காரணமாகத்தான் ஜானி டெப், ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டாராம்.
இதற்காக, இப்போது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார் ஜானி. தனது புகழை கெடுக்கும் நோக்கத்துடன் அவதூறாகத் தன்னை பற்றி கூறியதாகவும் அவரது புகார் காரணமாகவே பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டு விட்டதாகவும் இதற்காக அவர் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.355 கோடி) நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.